Published : 05 Mar 2022 04:30 AM
Last Updated : 05 Mar 2022 04:30 AM

தடைகளை கடந்து அமமுக உதவியோடு தேவகோட்டை நகராட்சியை அதிமுக கைப்பற்றியது எப்படி?

ரமேஷ்

தேவகோட்டை

தேவகோட்டை நகராட்சியில் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அதி காரியை மாற்றி தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் அமமுக ஆதரவுடன் தலைவர், துணைத் தலைவர் பதவிகளை அதிமுக கைப் பற்றியது.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இதில் அதிமுக- 10, அமமுக- 5, காங்கிரஸ்- 6, திமுக- 5, சுயேச்சை- 1 இடங்களில் வென்றன. அதன் பின்பு 19-வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் ஞானம்மாள் திமுகவில் இணைந்தார். இதையடுத்து திமுக - காங்கிரஸ் கூட்டணியின் பலம் 12 ஆக உயர்ந்தது. எனினும், தலைவர் பதவியை கைப்பற்ற இயலாத நிலை இருந்தது.

இந்நிலையில், 24-வது வார்டு திமுக கவுன்சிலர் பிச்சையம்மாளை கடத்திச் சென்றுவிட்டதாக அதிமுகவினர் மீது அவரது கணவர் விக்னேஷ்வரன் தேவ கோட்டை தாலுகா போலீஸாரிடம் புகார் தெரிவித்தார். அதை மறுத்த அதிமுக கவுன்சிலர்கள், தங்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் என்று போலீஸாரிடம் முறையிட்டனர். இதனிடையே, அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி உயர் நீதிமன்றம் உத் தரவிட்டது.

கடந்த 2-ம் தேதி நடந்த பதவியேற்பு விழாவின்போது திமுக கவுன்சிலர் பிச்சையம்மாள் உட்பட 27 கவுன்சிலர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

பின்னர், அதிமுக மற்றும் அமமுக கவுன்சிலர்கள் 15 பேரும், ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டியை சந்தித்து மனு அளித்தனர். அதில், ஆளும்கட்சி தரப் பினர் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தலை நடத்தவிடாமல் தடுக்க முயற்சிப்பதாக தெரிவித்திருந்தனர்.

இதனிடையே தேவகோட்டை நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியடும் வாய்ப்பை கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு திமுக ஒதுக்கியது.

இந்நிலையில் நேற்று காலை தேவகோட்டை நகராட்சி தலைவர் தேர்தலுக்காக கவுன்சிலர்கள் அனை வரும் வந்திருந்தனர். ஆனால் நகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அலு வலருமான அசோக்குமார், தனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறி, கூட்டத்துக்கு வரவில்லை. இதனால் தேர்தலை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் கூட்டரங்கை விட்டு வெளியேறினர். ஆனால் அதிமுக, அம முக கவுன்சிலர்கள் மற்றும் அதிமுக மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் எம்எல்ஏ, அமமுக மாவட்டச் செயலாளர் தேர்போகி பாண்டி, தலைமை நிலையச் செயலாளர் உமாதேவன் ஆகியோர் தேர் தலை நடத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினர். அவர்களை எஸ்பி செந் தில்குமார் சமரசப்படுத்தினார்.

இதைத்தொடர்ந்து நகராட்சி பொறி யாளர் மதுசூதனனை தேர்தல் நடத்தும் அலுவலராக நியமித்து மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து பகல் 1 மணிக்கு தேர்தல் நடத்தப்படும் என அறிவிப்பு வெளி யிடப்பட்டது.

தேர்தல் அலுவலரை மாற்றி தலைவர் தேர்தலை நடத்த திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இது தொடர்பான அறிவிப்பாணையை கவுன்சிலர்களின் வீடுகளுக்குச் சென்று அதிகாரிகள் வழங்கினர். ஆனால் திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்களில் சிலர், அந்த அறிவிப்பாணையை வாங்க மறுத்து விட்டனர். அதன்பின் நடந்த தலைவர், துணைத்தலைவர் தேர்தலில் அதிமுக, அமமுக கவுன்சிலர்கள் மட்டும் பங்கேற் றனர்.

தலைவராக அதிமுகவைச் சேர்ந்த சுந்தரலிங்கமும், துணைத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த ரமேஷூம் போட்டி யின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x