

இலங்கை தலைமன்னார் அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.
தமிழகம் மற்றும் புதுவை கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் மீன்பிடித் தடைக்காலம் கடந்த ஏப். 15-ம் தேதி தொடங்கியது. மே 29 வரை 45 நாட்கள் தமிழகத்திலும், மே 31 வரை 47 நாட்கள் புதுச்சேரி மாநிலத்திலும் இந்தத் தடை அமலில் இருக்கும். இந்த மீன்பிடித் தடைக் காலத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் 15ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கடற்கரையில் ஆழம் குறைந்த பகுதிகளில் ஓய்வெடுக்கத் தொடங்கியுள்ளன. ஆனால் வழக்கம்போல நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்குச் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் இருந்து செவ்வாய்க்கிழமை 60-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். புதன்கிழமை அதிகாலை நாட்டுப்படகு மீனவர்கள் தலைமன்னார் அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை மீறி இலங்கை கடற்பரப்பில் நுழைந்து மீன் பிடித்ததாகக் கூறி சேசு இருதயம், பொங்கலாண்டி, சேவியர் ஆகிய 3 பேருக்குச் சொந்தமான நாட்டுப்படகுகளைக் கைப்பற்றி, அதிலிருந்த 21 பாம்பன் மீனவர்களை சிறைபிடித்தனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் தலைமன்னாரில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு பின்னர் வவுனியா சிறைச்சாலையில் அடைக்கப்படுவர் எனத் தெரிகிறது.
முன்னதாக இலங்கை சிறைகளில் 13 தமிழக மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிறைபிடிக்கப்பட்ட 95 படகுகளும் விடுவிக்கப்படாமல் உள்ளன. இதுவரை, விசைப்படகு மீனவர்களை குறிவைத்து சிறைபிடித்து வந்த இலங்கை கடற்படையினர், தற்போது, நாட்டுப்படகு மீனவர்களை சிறைபிடித்து இருப்பது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.