நாகர்கோவில் மாநகராட்சியின் முதல் மேயராக மகேஷ் பதவியேற்பு: வாக்கெடுப்பில் திமுகவுக்கு 28, பாஜகவுக்கு 24 வாக்குகள்

நாகர்கோவில் மாநகராட்சியின் முதல் மேயராக மகேஷ் பதவியேற்பு: வாக்கெடுப்பில் திமுகவுக்கு 28, பாஜகவுக்கு 24 வாக்குகள்
Updated on
1 min read

நாகர்கோவில் மாநகராட்சி மேயருக்கான மறைமுக தேர்தலில் திமுகவுக்கு 28 வாக்குகளும், பாஜகவுக்கு 24 வாக்குகளும் கிடைத்தன. திமுக வேட்பாளர் மகேஷ் நாகர்கோவில் மாநகராட்சியின் முதல் மேயராக பதவியேற்றார்.

நாகர்கோவில் மாநகராட்சியில் 52 வார்டுகள் உள்ளன. 27 உறுப்பினர்களின் ஆதரவை பெறுவோர் மேயராக தேர்வாகும் நிலை இருந்தது. திமுக 24, காங்கிரஸ் 7, மதிமுக 1 வார்டில் வெற்றி பெற்றிருந்தன. இதனால், திமுக கூட்டணி வசம் 32 உறுப்பினர்கள் இருந்தனர். எனவே, மேயர் பதவியை திமுக எளிதாக கைப்பற்றும் நிலை இருந்தது. திமுக மாநகரச் செயலாளர் மகேஷ் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில், 11 இடங்களைப் பெற்ற பாஜகவுக்கு, அதிமுகவின் 7 உறுப்பினர்கள் ஆதரவளித்தனர். 18 உறுப்பினர்கள் பலத்துடன் மேயர் போட்டியில் பாஜக களம் இறங்கியது. பாஜக மேயர் வேட்பாளராக, நாகர்கோவில் முன்னாள் நகராட்சி தலைவர் மீனாதேவ் அறிவிக்கப்பட்டார்.

நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள இரு சுயேச்சை உறுப்பினர்களை தங்கள் வசம் திருப்ப திமுக,பாஜகவினர் தீவிர முயற்சி மேற்கொண்டனர். இவ்விரு கட்சிகளின் வேட்பாளர்களும் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர். தேர்தலில் மாநகராட்சியின் 52 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

திமுக வேட்பாளர் மகேஷ் 28 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். பாஜக வேட்பாளர் மீனாதேவ் 24 வாக்குகள் பெற்றார். இதைத்தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சியின் முதல் மேயராக மகேஷ் பதவியேற்றார். அவருக்கு மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், திமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் சுரேஷ்ராஜன், முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின் மற்றும் திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள், புதிய மேயருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

மேயர் மகேஷ் கூறும்போது, “நாகர்கோவில் மாநகராட்சியின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன். பாதாள சாக்கடைத் திட்டம் விரைந்து முடிக்கப்படும். நாகர்கோவிலை முன்மாதிரி மாநகராட்சியாக கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in