Published : 04 Mar 2022 06:38 PM
Last Updated : 04 Mar 2022 06:38 PM

"குற்ற உணர்ச்சியால் குறுகி நிற்கிறேன்" - கூட்டணிக்கு ஒதுக்கிய பதவிகளில் வென்ற திமுகவினர் பொறுப்பு விலக ஸ்டாலின் உத்தரவு

சென்னை: கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுகவினர் உடனடியாக தங்கள் பொறுப்பை விட்டு விலக வேண்டும் என்று அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து இன்று முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெற்ற வெற்றி மிகப் பெரிய மகிழ்ச்சியை அளித்தது. இதைத் தொடர்ந்து, கூட்டணிக் கட்சிகளுக்குள் நடத்திய பேச்சுவார்த்தை தோழமை உணர்வுடன் அமைந்து அனைவரும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் பங்கீடாக அமைந்ததும் அதிகளவு மகிழ்ச்சியை அளித்தது. அந்த மகிழ்ச்சியைக் சீர்குலைக்கும் வகையில், மறைமுகத் தேர்தலில் சில இடங்களில் நடந்த நிகழ்வுகள் என்னை மிகவும் வருத்தமடைய வைத்துள்ளது. வெற்றியை நினைத்தே கவலை அடைய வைக்கிறது.

அண்ணா சொன்ன "கடமை - கண்ணியம் - கட்டுப்பாட்டில்" மூன்றாவதாகச் சொல்லப்பட்ட கட்டுப்பாடுதான் மிக மிக முக்கியமானது என்று தலைவர் கருணாநிதி அடிக்கடி சொல்வார்கள். அந்தக் கட்டுப்பாட்டை சிலர் காற்றில் பறக்கவிட்டு, தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புகளில் உட்கார்ந்திருக்கிறார்கள். ஏதோ சாதித்துவிட்டதாக அவர்கள் நினைக்கலாம். ஆனால், கட்சித் தலைவர் என்ற முறையில் குற்ற உணர்ச்சியால், நான் குறுகி நிற்கிறேன்.

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம், நான் எனது மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எந்தத் தோழமை உணர்வு நமக்கு மக்கள் மனதில் நல்லெண்ணம் உருவாக்கியதோ, அந்த தோழமை உணர்வை எந்தக் காலத்திலும் உருக்குலைந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

கட்சித் தலைமை அறிவித்ததை மீறி தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக தங்கள் பொறுப்பை விட்டு விலக வேண்டும். விலகாவிட்டால் அவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று கட்சித் தலைவர் என்ற முறையில் எச்சரிக்கிறேன்.

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு விட்டு, கழகத்தின் நற்பெயருக்கே களங்கம் விளைவித்தவர்கள் அந்தப் பொறுப்பை விட்டு விலகிவிட்டு, என்னை வந்து சந்தியுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று ஸ்டாலின் கூறியுள்ளார்..

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x