

கோவை: திமுகவைச் சேர்ந்த வேட்பாளர், போட்டி வேட்பாளர் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, அன்னூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
கோவை மாவட்டம் அன்னூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில், திமுக 7 இடங்களில் வென்றது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களிலும், பாஜக ஒரு இடத்திலும், சுயேச்சை வேட்பாளர்கள் 4 இடங்களிலும் வென்றுள்ளனர். இப்பேரூராட்சியின் தலைவராக திமுக சார்பில் 10-வது வார்டு கவுன்சிலர் விஜயகுமார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடந்தது. இதில், திமுக தலைமையால் அறிவிக்கப்பட்ட கவுன்சிலர் விஜயகுமார் தலைவர் பதவிக்கு போட்டியிட மனு தாக்கல் செய்தார். அப்போது, திமுக அன்னூர் நகரச் செயலாளராக உள்ள 6-வது வார்டு கவுன்சிலர் பரமேஸ்வரன் தலைவர் பதவிக்கு போட்டி வேட்பாளராக மனு தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தப்பட்டது. மீதம் உள்ள கவுன்சிலர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்.
சிறிது நேரத்தில், அன்னூர் பேரூராட்சியின் செயல் அலுவலர் தேர்தல் முடிவை அறிவிக்க இருந்தார். அப்போது வேட்பாளர்கள் விஜயகுமார் - பரமேஸ்வரன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் இணைந்து செயல் அலுவலரிடம் இருந்த தேர்தல் முடிவு சீட்டினை பிடித்து இழுத்தனர். அதில் அந்தச் சீட்டு கிழிந்தது.
இதனால் அங்கு அசாதாரண சூழல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ‘வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, வாக்கு எண்ணிக்கையின் போது, சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டதால் அன்னூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் ம றுஉத்தரவு வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாக,’ செயல் அலுவலர் அறிவித்தார். இதையடுத்து அன்னூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.
அதன் பின்னர், போட்டி வேட்பாளர் பரமேஸ்வரன் தனது ஆதரவு கவுன்சிலர்கள் 9 பேரை தனது கட்டுப்பாட்டில் அழைத்துக் கொண்டு ரகசிய இடத்துக்குச் சென்றுவிட்டார்.