Published : 04 Mar 2022 05:01 PM
Last Updated : 04 Mar 2022 05:01 PM

அந்தியூர் பேரூராட்சித் தலைவர் தேர்தல் ரத்து | மா.கம்யூ.-க்கு பதவியை ஒதுக்க திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு

ஈரோடு: திமுக கூட்டணியில் அந்தியூர் பேரூராட்சித் தலைவர் பதவி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக கவுன்சிலர்கள் தேர்தலை புறக்கணித்ததால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சியில் மொத்தம் 18 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் திமுக 13 வார்டுகளிலும், காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றனர். அதிமுக இரு வார்டுகளிலும், சுயேட்சை ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளனர். திமுக கூட்டணியில் அந்தியூர் பேரூராட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கி அக்கட்சித் தலைமை அறிவிப்பு வெளியிட்டது.

இதன்படி, அந்தியூர் 3-வது வார்டில் போட்டியிட்டு வென்ற சிபிஎம் வேட்பாளர் எஸ்.கீதா சேகர் தலைவர் பதவிக்கு தேர்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்தியூர் பேருராட்சித் தலைவர் பதவியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வழங்க திமுகவினர் விரும்பவில்லை. 15-வது வார்டு திமுக கவுன்சிலர் பாண்டியம்மாளை தலைவர் பதவிக்கு போட்டியிட வைக்க திமுகவினர் முடிவு செய்திருந்தனர். இதனிடையே, பாண்டியம்மாளுக்கு நேற்று திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதாகக் கூறி, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பார்ப்பதற்காக கோவை சென்ற அந்தியூர் எம்.எல்.ஏ. வெங்கடாசலம் மற்றும் திமுக கவுன்சிலர்கள் அந்தியூருக்கு திரும்பி வரவில்லை.

இந்நிலையில், இன்று காலை தலைவர் பதவிக்கு விண்ணப்பம் செய்ய சிபிஎம் கவுன்சிலர் சென்றபோது, 10 கவுன்சிலர்களுடன் வந்தால் மட்டுமே விண்ணப்பம் தரப்படும் என தேர்தல் நடத்தும் அதிகாரி சித்ரா தெரிவித்துள்ளார். திமுக கவுன்சிலர்கள் யாரும் இன்று அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு வராத நிலையில் தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அசம்பாவிதங்களைத் தடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்தியூர் சிபிஎம் தாலுகா செயலாளர் முருகேசனிடம் கேட்டபோது, ”திமுக தலைமையுடன் ஏற்பட்ட உடன்படிக்கைப்படி, எங்களுக்கு அந்தியூர் பேரூராட்சித் தலைவர் பதவியை வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். திமுக தலைமையின் அறிவிப்பை செயல்படுத்துவதுதான் அக்கட்சிக்கும், முதல்வருக்கும் பெருமை சேர்ப்பதாக இருக்கும்” என்றார்.

இது தொடர்பாக அந்தியூர் திமுக எம்.எல்.ஏ. ஏ.ஜி.வெங்கடாசலத்திடம் கேட்டபோது, ‘திமுக கவுன்சிலர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் உள்ளதால், அனைத்து கவுன்சிலர்களும் அங்கு உள்ளனர். அதனால் தேர்தலுக்கு அவர்களால் வர முடியவில்லை. தலைவர் பதவியை திமுகவிற்கு வழங்க வேண்டும் என்ற கவுன்சிலர்களின் கோரிக்கையை, அமைச்சர் முத்துசாமியிடம் தெரிவித்துளோம். இது தொடர்பாக சிபிஎம் கட்சியினரிடம் அவர் பேசிக்கோண்டு இருக்கிறார்” என்றார்.

மார்க்சிஸ்டுகளுக்கு பெருத்த ஏமாற்றம்: திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கொல்லங்கோடு, திருமுருகன்பூண்டி ஆகிய இரண்டு நகராட்சித் தலைவர் பதவிகளும், பெரியநாயக்கன்பாளையம், வீரவநல்லூர், அந்தியூர் ஆகிய மூன்று பேரூராட்சித் தலைவர் பதவிகளும் ஒதுக்கப்பட்டன. இவற்றில் இரு நகராட்சிகளிலும், திமுக கவுன்சிலர்கள் போட்டியிட்டு தலைவர் பதவியைக் கைப்பற்றியுள்ளனர். பெரியநாயக்கன்பாளையம் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் பேரூராட்சிகளையும், கூட்டணி தர்மத்தை மீறி திமுகவினர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். எஞ்சிய அந்தியூர் பேரூராட்சியில் தேர்தலை ஒத்தி வைத்ததன் மூலம் திமுக கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x