Published : 04 Mar 2022 03:15 PM
Last Updated : 04 Mar 2022 03:15 PM

உட்கட்சி பூசலால் திருவத்திபுரம் நகராட்சியில் திடீர் திருப்பம்: அதிகாரபூர்வ வேட்பாளரை வீழ்த்தி திமுக செயலாளர் வெற்றி

திருவத்திபுரம் நகர்மன்ற தலைவர் மோகனவேல்.

திருவண்ணாமலை: திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் திமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு நகர்மன்ற தலைவராக நகர திமுக செயலாளர் மோகனவேல் வெற்றி பெற்றுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் உள்ள 27 வார்டுகளுக்கு கடந்த மாதம் 19-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 18 வார்டுகளை திமுகவும், ஒரு வார்டில் காங்கிரசும், 2 வார்டுகளை பாமகவும், தலா 3 வார்டுகளை சுயேச்சைகள் மற்றும் அதிமுக கைப்பற்றியது.

பெரும்பான்மையான வார்டுகளை திமுக கைப்பற்றியதால், நகர்மன்ற தலைவர் பதவிக்கு, நகர செயலாளர் மோகனவேல், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் விஸ்வநாதன் ஆகியோர் இடையே போட்டி நிலவியது. இந்நிலையில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தரணிவேந்தன், சட்டப்பேரவை உறுப்பினர் ஜோதி ஆகியோரது ஆதரவை பெற்றிருந்த விஸ்வநாதனை, நகர்மன்ற தலைவர் பதவிக்கு திமுக தலைமை முன்மொழிந்தது.

மாற்றி வாக்களித்த 7 பேர்

இதனால், திருவத்திபுரம் நகர்மன்ற தலைவராக விஸ்வநாதன் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திருவத்திபுரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மறைமுக தேர்தலில், திமுக தலைமை அறிவித்திருந்த அதிகாரபூர்வ வேட்பாளரை எதிர்த்து நகர செயலாளர் மோகனவேல் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பின்னர் நடைபெற்ற மறைமுக தேர்தலில் 16 வாக்குகளை பெற்று, நகர்மன்ற தலைவர் பதவியை மோகனவேல் கைப்பற்றி உள்ளார். இவர், 18-வது வார்டு உறுப்பினராக வெற்றி பெற்றவர். திமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளரான விஸ்வநாதன், 11 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்துள்ளார். திமுகவிடம் 18 கவுன்சிலர்கள் இருந்தும், 11 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது. 7 பேர், மோகனவேலை ஆதரித்துள்ளது தெளிவாகிறது. மேலும் அதிமுக, பாமக மற்றும் சுயேட்சைகளும் அவரை ஆதரித்திருக்கக்கூடும் என கூறப்படுகிறது.

வெளிச்சத்துக்கு வந்த உட்கட்சி பூசல்

இது குறித்து திமுகவினர் கூறும்போது, “2016-ல் செய்யாறு சட்டப்பேரவை தேர்தலில் செய்யாறு தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியதால், தனது அதிருப்தியை கடுமையான தெரிவித்தவர் மோகனவேல். இதனால் அவர் மீது, மாவட்ட அமைச்சருக்கு எதிர்மறையான பார்வை இருந்துள்ளது. மேலும் மாவட்ட பொறுப்பாளர் தரணிவேந்தன் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் ஜோதி ஆகியோரிடமும், சமூகமான சூழல் இல்லாமல் இருந்துள்ளது.

இந்நிலையில், திருவத்திபுரம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில், அவர் பரிந்துரை செய்த பெயர் பட்டியலை மாவட்ட திமுக புறக்கணித்துள்ளது. இதனால், தனது ஆதரவாளர்களை, சுயேட்சையாக களம் இறக்கி உள்ளார். இதுபோன்ற காரணங்களால், திமுகவினர் மற்றும் கவுன்சிலர்களிடம் செல்வாக்கு பெற்றிருந்த மோகனவேலுக்கு, நகர்மன்ற தலைவர் பதவி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர் உள்ளிட்டோரின் பரிந்துரைப்படி, விஸ்வநாதனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆரணி, வந்தவாசி, திருவண்ணாமலை நகராட்சிகளில் நகர செயலாளர் மற்றும் நகர பொறுப்பாளர்களுக்கு நகர்மன்ற தலைவர் பதவி வழங்கும் நிலையில், திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் மட்டும் நகர செயலாளர் புறக்கணிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டவர்களின் கோபத்தை புரிந்து கொள்ளலாம். இதனால், திமுக தலைமை அறிவித்திருந்த வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு மோகனவேல் வெற்றி பெற்றுள்ளார்.

கோஷ்டி அரசியல் எதிரொலியாக, திமுக தலைமை அறிவித்த வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டுள்ளது, அக்கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உட்கட்சி பூசலும் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. தலைமையின் அதிகாரபூர்வ வேட்பாளரை எதிர்த்துள்ளதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பு உள்ளது” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x