

குமாரபாளையம்: குமாரபாளையம் நகர்மன்ற தலைவர் பதவிக்கான தேர்தலில் 18 ஓட்டுகள் பெற்று சுயேச்சை உறுப்பினர் விஜய்கண்ணன் என்பவர் வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் சத்தியசீலன் 15 ஓட்டுகள் பெற்று தோல்வியைத் தழுவினார்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக 14 இடங்களிலும், அதிமுக 10 மற்றும் சுயேச்சை 9 இடங்களிலும் வெற்றி பெற்றன. இம்முறை நகர்மன்ற தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் என்பதால் அவர்களை நகர்மன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்ய வேண்டும்.
இந்நிலையில், குமாரபாளையம் நகர்மன்ற தலைவர் பதவிக்கு 17 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. திமுக, அதிமுக என யாருக்கும் தனி மெஜாரிட்டி இல்லை. இதனால் இரு பெரும் கட்சிகளும் சுயேச்சைகளின் தயவில் தலைவர் பதவியைப் பிடிக்க முனைப்பு காட்டி வந்தன. திமுக தரப்பில் 3 உறுப்பினர்கள் மட்டுமே தேவை என்பதால் எப்படியும் நகர்மன்ற தலைவர் பதவியைக் கைப்பற்றிவிடலாம் என்ற நம்பிக்கையில் சத்தியசீலன் என்பவரை கட்சியின் நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்தி நகர்மன்ற தலைவர் வேட்பாளராக அறிவித்தார். கட்சித் தலைமையும் அவரையே குமாரபாளையம் நகர்மன்ற தலைவர் வேட்பாளராக அறிவித்தது.
அதேவேளையில், முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி சொந்த தொகுதி என்பதால் அதிமுகவும் தலைவர் பதவியைப் பிடிக்க கடுமையாக போராடி வந்தது.
இந்த பரபரப்பு சூழலுக்கு மத்தியில், குமாரபாளையம் நகர்மன்ற தலைவர் பதவிக்கான தேர்தல் நகராட்சி ஆணையர் தலைமையில் நடைபெற்றது. திமுக தரப்பில் சத்தியசீலன், 31-வது வார்டு சயேச்சை உறுப்பினர் த.விஜய்கண்ணன் ஆகிய இருவரும் தலைவர் பதவிக்கு போட்டியிட, மனு தாக்கல் செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் சுயேச்சை உறுப்பினர் விஜய்கண்ணன் 18 ஓட்டுகள் பெற்று நகர்மன்ற தலைவர் பதவியை கைப்பற்றினார். திமுக வேட்பாளர் சத்தியசீலன் 15 ஓட்டுகள் பெற்றார். மூன்று ஓட்டு வித்தியாசத்தில் தலைவர் பதவியை திமுக நழுவ விட்டது.
கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற குமாரபாளையம் நகராட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியாக இருந்த அதிமுகவில் சீட் கிடைக்காத அதிருப்தியில் தனசேகரன் என்பவர் தான் மட்டுமன்றி தனது ஆதரவாளர்கள் 33 பேரை சுயேச்சையாக களம் இறக்கி வெற்றி பெற்றார். இது அப்போதைய ஆளுங்கட்சிக்கு பின்னடைவாக கருதப்பட்டது. அதேபோல் இம்முறையும் ஆளுங்கட்சியான திமுகவில் 'சீட்' கிடைக்காத அதிருப்தியில் விஜய்கண்ணன் என்பவர் தான் மட்டுமன்றி தனது ஆதரவாளர்கள் 15 பேரை சுயேச்சையாக களம் இறக்கினார். அதில் 9 பேர் வெற்றி பெற்றனர்.
தற்போது சேர்மன் பதவியும் விஜய்கண்ணன் கைப்பற்றியுள்ளார். நேரடி மற்றும் மறைமுகத் தேர்தல் என எப்படி தேர்தல் நடந்தாலும் தலைவர் பதவியை சுயேச்சை உறுப்பினர்கள் கைப்பற்றுவது திமுக, அதிமுகவினரை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 2-ம் தேதி நடைபெற்ற உறுப்பினர் பதவியேற்பு விழாவின்போது விஜய்கண்ணன் 18 உறுப்பினர்களுடன் தனி வாகனத்தில் வந்து பதவியேற்கச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.