Published : 04 Mar 2022 01:51 PM
Last Updated : 04 Mar 2022 01:51 PM

சென்னை மேயராக ஆர்.பிரியா பொறுப்பேற்பு: மறைமுக தேர்தலில் அதிமுக பங்கேற்கவில்லை

சென்னை: சென்னை மாநகராட்சியின் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த முதல் பெண் மேயராக பிரியா ராஜன் (எ) ஆர்.பிரியா பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த மறைமுக தேர்தலில் அதிமுக பங்கேற்கவில்லை.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 153 வார்டுகளில் திமுக வெற்றி பெற்று, மாநகராட்சியைக் கைப்பற்றியது. இத்தேர்தலில் போட்டியிட்டு, 74-வது வார்டில் வெற்றி பெற்ற கவுன்சிலர் ஆர்.பிரியாவை (28) மேயர் வேட்பாளராகவும், 169-வது வார்டில் வென்ற மு.மகேஷ்குமார் துணை மேயர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டனர்.

சென்னை ரிப்பன் மாளிகையில் இன்று நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சி மேயராக ஆர்.பிரியா பொறுப்பேற்றுக் கொண்டார். மேயர் பிரியாவுக்கு, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் மேயருக்கான செங்கோலை வழங்கினர். மேயருக்கான அங்கியை சென்னை மாநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடி வழங்கினார்.

சென்னை மாநகராட்சி மேயராக பதவியேற்றுள்ள ஆர்.பிரியா, சென்னை மாநகராட்சியின் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த முதல் பெண் மேயர் ஆவார். அதேநேரம் சென்னை மாநகராட்சியின் மூன்றாவது பெண் மேயரும் ஆவார். வணிகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள மேயர் ஆர்.பிரியாவின் கணவர் கே.ராஜா திரு.வி.க.நகரின் திமுக பகுதிச் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநகராட்சி மேயரை தேர்வு செய்யும் இந்த மறைமுக தேர்தலில் அதிமுக பங்கேற்கவில்லை. பாஜக கவுன்சிலர் பங்கேற்றிருந்தார். தமிழகம் முழுவதும் மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கான நடைபெறுகிறது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்கள், போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x