

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சியில் திமுக வேட்பாளர் சண்.ராமநாதன் 39 வாக்குகள் பெற்று மேயராக வெற்றி பெற்றார்.
தஞ்சாவூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 51 வார்டுகளில் திமுக கூட்டணி 40 வார்டுகளிலும், அதிமுக 7 வார்டுகளிலும், சுயேச்சை 2 வார்டுகளிலும், அமமுக, பாஜக தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றன.
மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே திமுகவில் தஞ்சாவூர் மேயர் வேட்பாளராக 45-ஆவது வார்டு உறுப்பினர் சண்.ராமநாதன் நேற்று அறிவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் தேர்தல் இன்று நடைபெற்றது. இதில், அதிமுக தரப்பில் மணிகண்டன் போட்டியிட்டதால் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில், திமுகவின் சண்.ராமநாதன் 39 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மணிகண்டன் 11 வாக்குகள் பெற்றார். அமமுகவைச் சேர்ந்த உறுப்பினர் பங்கேற்கவில்லை.
திமுக கூட்டணியில் 40 உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில் சண்.ராமநாதனுக்கு 39 வாக்குகள் கிடைத்தன.