'குடிநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பேன்': சிவகாசி மாநகராட்சியின் முதல் மேயர் சங்கீதா பதவியேற்றபின் பேட்டி

'குடிநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பேன்': சிவகாசி மாநகராட்சியின் முதல் மேயர் சங்கீதா பதவியேற்றபின் பேட்டி
Updated on
1 min read

விருதுநகர்: முதன்முறையாக மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ள சிவகாசி மாநகராட்சியின் மேயராக திமுகவைச் சேர்ந்த சங்கீதா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றது. முதன்முறையாக மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட சிவகாசியில் மேயர் பதவி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது.

சிவகாசி மாநகராட்சி 48 வார்டுகளை கொண்டது. இதில் திமுக 24 வார்டுகளிலும், அதிமுக 11 வார்டுகளிலும், காங்கிரஸ் 6 வார்டுகளிலும், சுயேச்சை 4 வார்டுகளிலும், விசிக மற்றும் பாஜக தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றனர்.

இந்நிலையில், அதிமுக சார்பில் வெற்றிபெற்ற 9 பேர் திமுகவில் இணைந்தனர். இதனால் திமுக வார்டு கவுன்சிலர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. இதில், 34-வது வார்டில் வெற்றி பெற்ற சங்கீதா என்பவர் மேயர் வேட்பாளராகவும், 35 வார்டு பகுதியில் வெற்றி பெற்ற விக்னேஷ் பிரியா துணை மேயராகவும் அறிவிக்கபட்டனர்.

சங்கீதா
சங்கீதா

இந்நிலையில் இன்று நடந்த மறைமுக தேர்தலில் திமுகவைச் சேர்ந்த சங்கீதா போட்டியின்றி சிவகாசி மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு தேர்தல் அதிகாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மேயராக தேர்வு செய்யப்பட்ட மேயர் சங்கீதா அதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டு தனது பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்.

சிவகாசி மேயராக பொறுப்பேற்றுள்ள சங்கீதா அளித்த பேட்டி: "சிவகாசி மாநகராட்சியில் குடிநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பேன். தரமான சாலைகள் மற்றும் சுகாதார வசதிகள் மேம்படுத்தப்படும் என தெரிவித்தார். மேலும், பட்டாசு, அச்சுத் தொழில் உள்ளிட்டவைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, சிவகாசியை உண்மையான குட்டி ஜப்பானாக மாற்றுவேன்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in