

வேலூர்: வேலூர் மாநகராட்சியின் மேயராக சுஜாதா ஆனந்தகுமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கான தேர்தல் முடிவு கடந்த மாதம் 22-ஆம் தேதி வெளியானது. இதில் திமுக 44, அதிமுக 7, சுயேட்சைகள் 6, திமுக கூட்டணியில் இடம்பெற்ற விசிக மற்றும் பாஜக, பாமக, தலா ஓரிடத்தில் வெற்றி பெற்றனர். திமுக தனிப் பெரும்பான்மையுடன் வேலூர் மாநகராட்சியை கைப்பற்றியது. இதனால், திமுகவின் மேயர் வேட்பாளர் யார் என்ற தேர்வும் சலசலப்புடன் தொடங்கியது.
இதில், தமிழக நீர்வளத்துறை அமைச்சரால் பலமாக பரிந்துரை செய்யப்பட்ட 7-வது வார்டில் போட்டியின்றி வெற்றிபெற்ற திமுக கவுன்சிலர் புஷ்பலதா வன்னியராஜாவின் பெயர் முன்னணியில் இருந்தது. அதேநேரம், வேலூர் மேயர் பதவிக்கு வேலூரில் இருந்துதான் தேர்வு செய்யவேண்டும் என வேலூர் நகர திமுக சார்பில் முன்மொழியப்பட்டது.
வேலூர் மாநகர திமுக செயலாளரும், வேலூர் தொகுதி எம்எல்ஏவுமான கார்த்திகேயன் தரப்பில் இருந்து 31-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சுஜாதா ஆனந்தகுமார் முன்னிருத்தப்பட்டார். இதில், சுஜாதா ஆனந்தகுமாரை மேயர் வேட்பாளராகவும், மாநகராட்சி 7-வது வார்டில் போட்டியின்றி தேர்வான சுனில் குமாரை துணைமேயர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், வேலூர் மாநகராட்சியில் மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் இன்று காலை நடைபெற்றது. மாமன்ற கூட்டரங்கில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் 48 பேர் பங்கேற்றனர். கூட்டம் நடத்துவதற்கான போதிய உறுப்பினர்கள் பலம் இருந்ததால் மேயர் பதவிக்கான மறைமுக தேர்தலை மாநகராட்சி ஆணையாளரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான அசோக்குமார் அறிவிப்பு வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து திமுக சார்பில் மேயர் வேட்பாளராக சுஜாதா ஆனந்தகுமார் மனுதாக்கல் செய்தார். வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யாத நிலையில் சுஜாதா ஆனந்தகுமார் போட்டியின்றி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
மேயர் பதவிக்கான மறைமுக தேர்தலில் அதிமுக கவுன்சிலர்கள் 7 பேரும் பங்கேற்காமல் புறக்கணிப்பு செய்தனர். அதேபோல் மேயர் பதவிக்கு திமுகவில் பலமாக போட்டியிட்ட 7-வது வார்டு கவுன்சிலர் புஷ்பலதா வன்னியராஜாவும், 2-வார்டு திமுக கவுன்சிலர் விமலா ஆகியோர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
துணை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெற உள்ளது. மேயர், துணை மேயர் பதவியேற்பு விழாவை தனியாக நடத்தவும் ஏற்பாடு செய்துள்ளனர்.