Last Updated : 04 Mar, 2022 10:20 AM

 

Published : 04 Mar 2022 10:20 AM
Last Updated : 04 Mar 2022 10:20 AM

புதுக்கோட்டை அன்னவாசல் பேரூராட்சியில் திமுக, அதிமுக போராட்டம்: போலீஸ் தடியடியால் பதற்றம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பேரூராட்சியில் மறைமுக தேர்தலைத் தொடர்ந்து இன்று (மார்ச் 4) திமுக, அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருதரப்பும் கைகலப்பில் ஈடுபட்டதால் தடியடி நடந்தது. இதனால், அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் 8 இடங்களில் அதிமுக, 6 இடங்களில் திமுக கூட்டணி மற்றும் ஒரு இடத்தில் சுயேச்சை வேட்பாளரும் வெற்றி பெற்றார். இந்நிலையில், சுயேச்சையாக வெற்றி பெற்றவரும் அதிமுகவுக்கு ஆதரவு அளித்துள்ளார்.

இந்நிலையில், அன்னவாசல் பேரூராட்சியில் மார்ச் 2-ம் தேதி பதிவியேற்பு விழா நடைபெற்றது. முற்பகலில் திமுகவைச் சேர்ந்த 5 பேர் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 6 பேரும் பதவியேற்றனர்.

பிற்பகலில் விராலிமலையில் இருந்து சுமார் 35-க்கும் மேற்பட்ட கார்களில் அதிமுக உறுப்பினர்கள் 8 பேர் மற்றும் சுயேச்சையாக வெற்றி பெற்ற ஒருவர் என மொத்தம் 9 பேரையும் அதிமுகவைச் சேர்ந்த ஏராளமானோர் ஊர்வலமாக அழைத்து வந்து பதவியேற்றனர். இந்நிலையில், தலைவர் மற்றும் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதையடுத்து, காலை 7 மணிக்கெல்லாம் அதிமுகவைச் சேர்ந்த 9 கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். திமுகவைச் சேர்ந்த ஒருசில கவுன்சிலர்களும் உள்ளே சென்றனர். இதைத்தொடர்ந்து அலுவலகத்தைச் சுற்றிலும் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுகவினரும், திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன் தலைமையில் திமுகவினரும் திரண்டனர்.

இரு கட்சிகளைச் சேர்ந்தோரும் அராஜகத்தில் ஈடுபடுவதாக ஒருவரையொருவர் மாறி, மாறி குற்றம் சாட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், பேரூராட்சி அலுவலக வாசலில் வைக்கப்பட்ட பேரிகார்டுகளைக் கடந்து திமுகவினர் அலுவலகத்துக்குள் செல்ல திமுகவினர் முயற்சித்தனர்.

இதனால் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாருக்கும், கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே தொடர் பதற்றத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக இரு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளிடம், தேர்தலை அமைதியா நடத்த ஒத்துழைப்பு அளிக்குமாறும், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படியே தேர்தல் நடத்தப்படுவதாகவும் கூறி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

தங்களுக்கு சுதந்திரமாக வாக்களிக்கும் வகையில் போதிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அதிமுகவினர் தொடர்ந்த வழக்கில், 'உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என உயர்நீதிமன்ற மதுரை கிளை நேற்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x