கும்பகோணத்தின் முதல் மேயராகும் ஆட்டோ ஓட்டுநர்: காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் பெண் மேயராகும் மென்பொருள் பொறியாளர்

கும்பகோணத்தின் முதல் மேயராகும் ஆட்டோ ஓட்டுநர்: காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் பெண் மேயராகும் மென்பொருள் பொறியாளர்
Updated on
1 min read

கும்பகோணம்/காஞ்சிபுரம்: கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயராகும் வாய்ப்பை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சரவணன் பெற்றுள்ளார்.

புதிதாக உருவாக்கப்பட்ட கும்பகோணம் மாநகராட்சியின் முதல் தேர்தலில், மொத்தம் உள்ள 48 வார்டுகளில் திமுக 37, காங்கிரஸ் 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா 1 என 42 வார்டுகளில் திமுக கூட்டணி கட்சியினரும், அதிமுக, சுயேச்சை வேட்பாளர்கள் தலா 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.

இங்கு திமுக கூட்டணி அதிகஇடங்களில் வெற்றி பெற்று உள்ளதால், கும்பகோணத்தின் முதல் மேயர் பதவியை பெற திமுகவினர் கடுமையாக முயன்று வந்தனர். ஆனால், கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்து திமுக தலைமை நேற்று அறிவித்தது.

காங்கிரஸ் கட்சிக்கு 4 வார்டுகள் ஒதுக்கப்பட்ட நிலையில், 2 இடங்களில் மட்டும் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இதில், 17-வது வார்டில் வென்ற ஆட்டோ ஓட்டுநர் க.சரவணன்(42) என்பவரை மேயர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

கும்பகோணம் துக்காம்பாளையம் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வரும் இவர், 10-ம் வகுப்புவரை படித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக நகர துணைத் தலைவராக பதவிவகித்து வருகிறார். கடந்த 8 ஆண்டுகளாக சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். முதன்முறையாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள சரவணனுக்கு மனைவி தேவி, 3 மகன்கள் உள்ளனர். துணை மேயர் பதவிக்கு திமுகவைச் சேர்ந்த முன்னாள் நகர்மன்றத் தலைவரான சு.ப.தமிழழகன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

காஞ்சி மேயராகும் பெண்

காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் பதவியை பெற 6 பெண் வார்டு உறுப்பினர்கள் முயற்சித்து வந்தனர். இந்நிலையில் தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ள யுவராஜின் மனைவி மகாலட்சுமியை மேயர் வேட்பாளராக திமுக தலைமை அறிவித்துள்ளது. மகாலட்சுமி இன்போசிஸ் நிறுவனத்தின் மென்பொருள் பொறியாளராக பல ஆண்டுகள் பணிபுரிந்து வந்தவர். அரசியலுக்கு வந்து அவர் மாநகராட்சி வார்டு உறுப்பினராக வெற்றி பெற்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in