

பல்லாவரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்தபோது கடவுள் பெயரைச் சொல்லி உறுதிமொழி ஏற்றார்.
காஞ்சிபுரம் மாவட்டம் பல்லாவரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் டாக்டர் கோபி அய்யாசாமி நேற்று மதியம் 12.30 மணியளவில் நகராட்சி அலுவலகத்தில் இயங்கும் தொகுதி தேர்தல் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி என்.விஸ்வநாதனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, பல்லாவரம் நகராட்சி ஆணையாளரும், உதவி தேர்தல் அதிகாரியுமான கே.சிவகுமார் உடனிருந்தார். பாஜக வேட்பாளர் கோபி அய்யாசாமி வேட்புமனு தாக்கல் செய்தபோது அவரது தந்தை கே.ஜெ.அய்யாசாமி, பாஜக பல்லாவரம் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் ஜெயக்குமார், பம்மல் நகரத் தலைவர் சாரதி, மாநில எஸ்சி அமைப்பு தலைவர் பரதன் ஆகியோர் உடனிருந்தனர். வேட்பு மனுவை தாக்கல் செய்த பிறகு வேட்பாளர்கள் உறுதிமொழி ஏற்பர். அந்த வகையில், தேர்தல் அதிகாரி விஸ்வநாதன் உறுதிமொழி வாசகங்களை கூற, வேட்பாளர் கோபி அய்யாசாமி அதை திரும்பச் சொல்லி ஆண்டவன் மீது சூளுரைத்து உறுதிமொழி ஏற்பதாக கூறினார்.
எம்பிபிஎஸ், எம்எஸ் பட்டதாரியான வேட்பாளர் கோபி அய்யாசாமி (வயது 42) காது மூக்கு தொண்டை நிபுணர் ஆவார். படுகர் சமூகத்தைச் சேர்ந்தவர். குரோம்பேட்டையில் உள்ள பாலாஜி மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். சரவணா நினைவு கல்வி அறக்கட்டளையின் மனிதநேய விருது உட்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார் சென்னையில் வெள்ளம் ஏற்பட்டபோது குரோம்பேட்டை பகுதி வெள்ள நிவாரண ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றினார். 500-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம் களையும், ரத்த தான முகாம் களையும் உடல் உறுப்புதான விழிப்புணர்வு முகாம்களையும் நடத்தியிருக்கிறார். பல்லாவரம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் ஜி.மகாராஜனும் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தாம்பரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.வேதா சுப்ரமணியம் தாம்பரம் கோட்டாட்சியரும், தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியுமான ஜி.விமல்ராஜிடம் நேற்று மதியம் 2 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது தாம்பரம் வட்டாட்சியரும் உதவி தேர்தல் அதிகாரியுமான கார்த்திகேயன் உடனிருந்தார்.
பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரான வேதா சுப்ரமணியம், தாம்பரம் தொகுதி தேர்தல் பொறுப்பாளரும் ஆவார். முன்னதாக, மதியம் 12 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பி.நாகநாதனும் வேட்பு மனு தாக்கல் செய்தார்.