Published : 04 Mar 2022 07:31 AM
Last Updated : 04 Mar 2022 07:31 AM
மதுரை/தேனி: அதிமுக தேனி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்தில் சசிகலா, தினகரனை மீண்டும் கட்சியில் சேர்க்க வலியுறுத்தி தீர்மானம்நிறைவேற்றியதும் அதன் நகலைகூட்டத்தில் இருந்த ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் வழங்கினர். சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று கூறிய தேனி மாவட்ட நிர்வாகிகள், ஓ.பன்னீர்செல்வத்தின் நிழலாக தொடரக் கூடியவர்கள். அதனால், அவரது முன்னிலையில் அவரின் ஒப்புதல் இன்றி இப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இருக்க முடியாது.
இதற்கிடையே, ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா, சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பதே கட்சித் தொண்டர்கள் விருப்பமாக உள்ளது என்றும் அதற்கான ஏற்பாடுகளை தானே முன்னின்று செய்து வருவதாக கூறி உள்ளார். ஆனால், இதுவரை கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, புதிய தீர்மானத்தின் மீது கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. ஓ.பன்னீர்செல்வமும் எதுவும் தெரிவிக்கவில்லை.
இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக பழனிச்சாமி தனது ஆதரவு நிர்வாகிகள் மூலம் ஓ.பன்னீர்செல்வத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் நேற்று காலை 11 மணிக்கு பெரியகுளம் கைலாசபட்டியில் உள்ள பண்ணை வீட்டில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்துப் பேசினார். இதில் இருவரும் 3 மணி நேரத்துக்கும் மேலாக பேசியதாககூறப்படுகிறது.
ஆர்பி.உதயகுமார், தீர்மானத்தை ஆதரித்துப் பேசினாரா? அல்லது பழனிசாமியின் தூதுவராகச் சென்றாரா? என்பது தெரியவில்லை. பேசி முடித்துவிட்டு வெளியே வந்த ஆர்பி.உதயகுமார் செய்தியாளர்களைச் சந்திக்காமல் காரில் மதுரை புறப்பட்டார். ஓ.பன்னீர்செல்வமும் போடிக்குப் புறப்பட்டுச் சென்றார். இருவரும் என்ன பேசினர் என்பதை இரு தரப்பும் தெரிவிக்கவில்லை.
நேற்று நடந்த சம்பவம் தொடர்பாக ஆர்பி.உதயகுமாரை தொடர்புகொண்டு கருத்துக் கேட்க முயன்றபோது அவர் அழைப்பை எடுக்கவில்லை.
என்ன பேசிக் கொண்டனர்?
இச் சந்திப்புக் குறித்து தேனிமாவட்ட அதிமுகவினர் கூறும்போது, அதிமுகவில் பிளவு ஏற்பட்டால் அது திமுகவுக்கு மேலும் மேலும் சாதகமாகி விடும். அதனால், இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் அல்லது சசிகலாவையும், தினகரனையும் மீண்டும் சேர்ப்பது குறித்து கட்சியின் முன்னணித் தலைவர்களுடன் நன்கு ஆலோசித்து பிறகு முடிவெடுக்கலாம் என்று பேசியதாக கூறப்படுகிறது. அதற்குள் எந்த அவசர முடிவும் எடுக்க வேண்டாம் என ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆர்பி.உதயகுமார் கூறியதாகச் சொல்லப்படுகிறது என்றனர்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த நிலையில், சசிகலாவை கட்சித் தலைமைப் பதவிக்கும் முதல்வர் பதவிக்கும் வர வேண்டும் என்று முதல் ஆளாக ஆர்பி.உதயகுமார்தான் குரல் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT