Published : 04 Mar 2022 09:55 AM
Last Updated : 04 Mar 2022 09:55 AM
டாப்சிலிப் வனப்பகுதியில் காயமடைந்த காட்டு யானை சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தது.
ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப் வனப்பகுதியில், கடந்த 27-ம் தேதி கால் மற்றும் உடல் பகுதிகளில் ஏற்பட்ட காயத்தால் உணவு தேட முடியாமல் தவித்துவந்த 5 வயது பெண் யானையை வனத்துறையினர் மீட்டனர். வரகளியாறு யானைகள் முகாம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட கரோலில் யானையை அடைத்து, வனக் கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளித்தனர். காட்டுயானையின் பின்னங்காலில் கடுமையான காயம் இருந்ததால், மூன்று கால்களை மட்டும் பயன்படுத்தி நிற்கவும், நடக்கவும் சிரமப்பட்டு வந்தது. காயம் குணமடைய யானையின் காலில் ஆயுர்வேத கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டன. இந்நிலையில், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து வந்த மருத்துவக் குழுவினர் யானையை பரிசோதித்து சிகிச்சை அளித்தனர்.
இதுகுறித்து, உலாந்தி வனச்சரக அலுவலர் காசிலிங்கம் கூறும்போது, “மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் இருந்த காட்டு யானை திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தது. பிரேத பரிசோதனையில், யானையின் காலில் ஏற்பட்ட காயத்தில் சீழ் உருவாகி அது ரத்தத்தில் கலந்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT