

அதிமுகவுக்கு சசிகலா தலைமை ஏற்க வேண்டும் என கோவை கவுண்டம்பாளையம் தொகுதி முன்னாள் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் வி.சி.ஆறுக்குட்டி தெரிவித்தார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், தேர்தலுக்குப் பிறகான அரசியல்சூழலில் அதிமுகவில் சசிகலாவையும், டிடிவி தினகரனையும் சேர்க்க வேண்டும், அமமுகவை அதிமுகவுடன் இணைக்க வேண்டும் என்ற குரல்கள் ஆங்காங்கு கட்சியினர் மத்தியில் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இதே கருத்தை கோவையில் கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வி.சி.ஆறுக்குட்டி முன் வைத்துள்ளார்.
இதுகுறித்து கோவை விளாங்குறிச்சியில் உள்ள தனது இல்லத்தில்செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இரு தேர்தல்களில் தோல்வியை கட்சி சந்தித்துள்ளது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு பொதுமக்களுக்கு அதிமுக மீதான பற்று குறைந்துவிட்டது. கட்சியினர் மகிழ்ச்சியாக, கட்சியின் கரை வேட்டியைக் கட்டிக் கொண்டு நெஞ்சை நிமிர்த்தி வீதிகளில் செல்லும் நிலை தற்போது இல்லை. கட்டுப்பாடு இல்லாமல் கட்சி செல்கிறது.
அதிமுக மீள வேண்டும் எனில் அதிமுக மற்றும் அமமுக இணைந்து செயல்பட வேண்டும். சசிகலா தலைமையில், டிடிவி தினகரன் வழிகாட்டுதலில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து அதிமுகவை நடத்திச் செல்ல வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விருப்பப்படி 100 ஆண்டுகள் அதிமுக இருக்க வேண்டும் எனில் அனைவரும் ஒன்றுசேர்ந்தால் மட்டுமே முடியும். யார் சொல்லியும் இதை நான் சொல்லவில்லை. அதிமுகவின் நலன் கருதியே இதனைத் தெரிவிக்கிறேன். இருவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பம்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு இரட்டை தலைமை என்பது முக்கிய காரணம். மக்கள் இதனை ஏற்கவில்லை. அதற்காக ஓபிஎஸ், இபிஎஸ் இருவரையும் குறை சொல்ல முடியாது. அவர்களால் இயன்றதை செய்துள்ளனர். ஒரு விஷயத்தை மக்கள் ஏற்காதபோது அதனை மாற்றிக் கொள்வதுதான் நல்லது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.