

சேலம்: கோடை வெயிலை சமாளிக்க சேலம் மாநகர போக்குவரத்துப் பிரிவு போலீஸாருக்கு தெர்மாகோல் தொப்பி மற்றும் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்தது.
அப்போது, அங்கு போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருக்கு மாநகர காவல் ஆணையர் நஜ்முல் ஹோடா தெர்மாகோல் தொப்பியும், நீர் மோரும் வழங்கினார். இதேபோல, சேலம் மாநகரில் பணிபுரியும் 125 போக்குவரத்துப் பிரிவு போலீஸாருக்கும் தெர்மாகோல் தொப்பி மற்றும் நீர்மோரை மாநகர காவல் ஆணையர் நஜ்முல் ஹோடா வழங்கினார்.
இதுதொடர்பாக மாநகர காவல் துணை ஆணையர் மோகன்ராஜ் கூறும்போது, “மாநகரில் பல்வேறு பகுதிகளில் போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். தலைக்கவசம் அணியாமல், முகக் கவசம் அணியாமல் சென்றவர்கள் மீது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாக அபராதம் மற்றும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வெயில் தாக்கம் காரணமாக மாநகர பகுதியில் உள்ள முக்கிய இடங்களில் பொதுமக்களுக்கு நிழல்குடை அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது” என்றார்.