

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் பதவி விலக வேண்டு மென வலியுறுத்தி ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி நகரில் புதிய பேருந்து நிலையம், பெங்களூரு சாலை, சேலம் சாலை, காவேரிப்பட்டணம் பனகல் தெரு, தருமபுரி சாலை, கொசமேடு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று அதிமுக-வின் தலைமை நிர்வாகிகள் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. ‘அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் சட்டப் பேரவை தேர்தல், ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் ஏற்பட்ட தொடர் தோல்விக்கு பொறுப்பேற்று உடனே பதவி விலக வேண்டும். சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்று ராணுவ கட்டுப்பாட்டுடன் கட்சியை வழிநடத்தி மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும்’ என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
இந்த சுவரொட்டிகளை காவேரிப்பட்டணம் ஒன்றியத்தைச் சேர்ந்த பி.சி.வெற்றிவேல் என்பவர் ஒட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் கூறும்போது, ‘எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு ஜெயலலிதா, சசிகலா ஆகி யோரால் வளர்க்கப்பட்ட கட்சி அதிமுக. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கட்சியை கைப்பற்றிய பன்னீர்செல்வம், பழனிசாமி கூட்டணிக்கு தன்னிச்சையாக முடிவு எடுக்க தெரியவில்லை. இதனால் கட்சியின் பல லட்சம் தொண்டர்கள் கட்சி மாறியுள்ளனர். மீதமுள்ள தொண்டர்கள் வேதனையில் உள்ளனர். புதுவை மாநிலத்தில் அதிமுக-வின் அடையாளமே தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. சசிகலாவின் 38 ஆண்டு கால தியாகம் மதிக்கப்படவில்லை. இரண்டாம் கட்ட தலைவர்களின் அறிவுறுத்தல்படி அவரை ஒதுக்கி வைத்த அதிமுக தலைவர்கள் உடனே பதவியில் இருந்து விலக வேண்டும்’ என்றார்.
இந்த சுவரொட்டிகள் அதிக அளவில் ஒட்டப்பட்டிருக்கும் காவேரிப்பட்டணம் பகுதி, அதிமுக-வின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமியின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.