Published : 04 Mar 2022 09:09 AM
Last Updated : 04 Mar 2022 09:09 AM

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் மருத்துவப் படிப்பில் சலுகை வழங்க முடியுமா? - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: அனைவருக்கும் கல்வி ஒரே மாதிரியாக இருக்கும்போது, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு சலுகை வழங்க முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், இது தொடர்பாக அரசியலமைப்பு சட்டத்தைத்தான் திருத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி, முந்தைய அதிமுக ஆட்சியில் சட்டம் கொண்டுவரப்பட்டது.

இதை எதிர்த்தும், அரசு உதவிபெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இந்த இடஒதுக்கீடு சலுகையை வழங்கக் கோரியும் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் மீதான விசாரணை, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடைபெற்றது.

உள் இடஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தவர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீ ராம் பஞ்சு ஆஜராகி, "தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு அமலில் உள்ள நிலையில், மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் பிரத்யேகமாக 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்க முடியாது.

அவ்வாறு அமல்படுத்தினால் அது 69 சதவீத இடஒதுக்கீடு வரம்புக்குள் வராத, எஞ்சிய 31 சதவீத பொதுப்பிரிவினருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், நீட் தேர்வை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் இந்த உள் இடஒதுக்கீடு உள்ளதாக மத்திய அரசும் தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளது.

இதுதவிர, இடஒதுக்கீடு என்பது 50 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் உள் இடஒதுக்கீடு வழங்குவதால், தகுதியான பிற மாணவர்கள் பாதிக்கப்படுவர்" என்று வாதிட்டார்.

தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "நீட் தேர்வு காரணமாக மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் சேர முடியாத நிலை இருந்ததால், இந்த பிரத்யேக உள் இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது.

அரசுப் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்கள் யார் என்றும், அவர்கள் சமுதாயத்தில் எந்தப் பிரிவினர் என்பதையும் நன்றாக ஆராய வேண்டும். சமூக கட்டமைப்பில் உள்ள சமமற்ற நிலையை அகற்றவே, இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது" என்றார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, "அனைவருக்கும் கல்வி ஒரே மாதிரியாக இருக்கும்போது, மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனியாக உள் இடஒதுக்கீடு சலுகை வழங்க முடியுமா? இவ்வாறு கல்வி நிறுவனங்கள் அடிப்படையில் முன்னுரிமை அளிக்க முடியுமா?" என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், "இவ்வாறு உள் இடஒதுக்கீடு வழங்க முடியும் என்றால், அரசியலமைப்பு சட்டத்தைத்தான் திருத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.

அதற்கு பதில் அளித்த மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், "ஒரே மாதிரியான படிப்பை படித்தாலும், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எத்தனை பேர் மருத்துவப் படிப்பில் நுழைகின்றனர் என்பதைப் பார்க்க வேண்டும்.

சமநிலையற்ற நிலையில் சமூக கட்டமைப்பு இருப்பதால்தான், பொருளாதாரத்தில் பின்தங்கிய, முன்னேறிய வகுப்பினருக்கும் தனியாக இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது" என்றார்.

இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை தொடர் வாதத்துக்காக வரும் 17-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x