

ஆவடி: திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சியின் 48 வார்டுகளில், திமுக 35 வார்டுகளிலும், கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் 3, மதிமுக 3, விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றன. அதிமுக 4, சுயேச்சை ஓர் இடத்தில் வெற்றி பெற்றுள்ளன.
இதில், அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றவர்களில் 14, 16 ஆகிய வார்டுகளில் வென்ற க.ராஜேஷ்குமார், ஆ.மீனாட்சி ஆகியோர் திமுகவில் இணைந்துள்ளனர்.
இந்நிலையில், திமுக தலைமை நேற்று ஆவடி மாநகராட்சி மேயர் வேட்பாளராக, திமுக வட்டச் செயலாளரான கு.உதயகுமார்(42) என்பவரை அறிவித்துள்ளதோடு, துணை மேயர் பதவியைக் கூட்டணிக் கட்சியான மதிமுகவுக்கு ஒதுக்கியுள்ளது. இதனால், துணை மேயர் வேட்பாளராக ஆவடி மாநகர செயலாளரான எஸ்.சூரியகுமாரை(48) மதிமுக தலைமை அறிவித்துள்ளது.
மேயர் வேட்பாளரான கு.உதயகுமார், திருமுல்லைவாயல் பகுதி அடங்கிய 9-வது வார்டில் போட்டியிட்டு, வென்றவர். 10-ம் வகுப்பு தோல்வியடைந்த இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
அதேபோல, துணை மேயர் வேட்பாளர் எஸ். சூரியகுமார், பள்ளிக்கல்வி இறுதியாண்டு படித்துள்ளார். 23-வது வார்டில் போட்டியிட்டு, வென்ற எஸ்.சூரியகுமார், மதிமுக தொடங்கப்பட்ட காலம் முதல், அக்கட்சியிலிருந்து வந்தார். இவர், தற்போது மதிமுகவின் ஆவடி மாநகர செயலாளராக உள்ளார். மேயர், துணைமேயர் வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.