Published : 04 Mar 2022 06:25 AM
Last Updated : 04 Mar 2022 06:25 AM

தாம்பரம் மாநகராட்சியின் முதல் பெண் மேயராகும் வசந்தகுமாரி: திமுக தலைமை அறிவிப்பு

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியின் முதல் பெண் மேயராகும் வாய்ப்பை பட்டதாரி பெண்ணான வசந்தகுமாரிக்கு திமுக வழங்கியுள்ளது. துணை மேயராக காமராஜர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

தாம்பரம் மாநகராட்சியில் 70 வார்டுகள் உள்ளது. இதில், திமுக கூட்டணி 54 இடங்களைக் கைப்பற்றி உள்ளது. திமுக தலைமைநேற்று மேயர் வேட்பாளராக பட்டதாரி பெண்ணான வசந்தகுமாரி பெயரை அறிவித்துள்ளது. அதேபோல் துணை மேயராக குரோம்பேட்டையைச் சேர்ந்த ஜி.காமராஜுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. திமுக அதிக இடங்களைபெற்றுள்ளதால் இவர்கள் போட்டியின்றி தேர்வு செய்ய வாய்ப்பு அதிகம் உள்ளது.

மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள க.வசந்தகுமாரி(25) பிடெக் கெமிக்கல் இன்ஜினீயரிங் படித்தவர். இவரது தந்தை கமலக்கண்ணன், தாய் ஜெயந்தி, கணவர் கோகுல செல்வன். தற்போது வசந்தகுமாரி திமுகவில் தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இவர் இவரது குடும்பத்தில் முதல் பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது. இவரது குடும்பம் கடந்த 48 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து வருகின்றனர்.

அதேபோல குரோம்பேட்டையைச் சேர்ந்தகாமராஜ் துணை மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 10-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் 2006 முதல் 2011 வரை திருநீர்மலை பேரூராட்சியில் வார்டு உறுப்பினராக இருந்தார். இதேபோல் இவரது மனைவி கலைவாணி 2011 முதல் 2014 வரை அதேபேரூராட்சியின் தலைவராக இருந்தார். அருண்ராஜ், அரவிந்த்ராஜ் என 2 மகன்கள் உள்ளனர். துணை மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ள காமராஜ், அரக்கோணம் மக்களவைஉறுப்பினர் ஜெகத்ரட்சகனின் மைத்துனர்என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் 2 பேரும் தேர்வாக அதிக வாய்ப்பு உள்ளதாக ஏற்கெனவே 'இந்து தமிழ்' நாளிதழில் செய்தி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x