

சிவகங்கை மாவட்ட உள்ளாட்சிகளில் அதிமுக கரைந்து வருகிறது. திமுகவுக்கு மாறும் கவுன்சிலர்களை தடுக்க முடியாமல் கட்சி நிர்வாகிகள் திணறி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் 12 ஒன்றியங்கள், 11 பேரூராட்சிகள், 4 நகராட்சிகள் உள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 12 ஒன்றியங்களில் 7 ஒன்றியங்களை அதிமுகவும், திருப்பத்தூர், கல்லல், மானாமதுரை ஆகிய 3 ஒன்றியங்களை திமுகவும், கண்ணங்குடி ஒன்றியத்தை அமமுகவும் பிடித்தன. திருப்புவனம் ஒன்றியத்துக்கு மட்டும் சட்ட ஒழுங்கு காரணத்தை காட்டி தொடர்ந்து தேர்தல் நடக்காமல் தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு அதிமுகவைச் சேர்ந்த சிவகங்கை ஒன்றியத் தலைவர் 3 கவுன்சிலர்களோடு திமுகவில் இணைந்தார். தொடர்ந்து நடந்த திருப்புவனம் ஒன்றியத் தலைவர் தேர்தலில் திமுக வென்றது. இதன்மூலம் திமுக 5 ஒன்றியங்களை கைப்பறியது. மேலும் இளையான்குடி ஒன்றியத்தில் அதிமுக பெரும்பான்மையாக இருந்தநிலையில், சில கவுன்சிலர்கள் திமுகவுக்கு மாறியதால், திமுக 9, அதிமுக 7 மட்டுமே உள்ளனர். மேலும் சில கவுன்சிலர்கள் ஆதரவோடு தலைவர் பதவியை கைப்பற்ற திமுக முயற்சித்து வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், மொத்தமுள்ள 4 நகராட்சிகளில் தேவகோட்டை நகராட்சியை தவிர்த்து மற்ற மூன்றையும் திமுக கைப்பற்றியது. அதேபோல் 11 பேரூராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியது. இதில் கோட்டையூர் பேரூராட்சியில் ஒரு இடத்தில்கூட அதிமுக வெற்றி பெறவில்லை. சிங்கம்புணரி பேரூராட்சியில் வெற்றி பெற்ற ஒரு கவுன்சிலரும் திமுகவுக்கு தாவியதால், அங்கும் அதிமுக பலம் பூஜ்யமானது.
அதேபோல் சிவகங்கை நகராட்சியில் மொத்தமுள்ள 27 வார்டுகளில் அதிமுக 5-ல் வென்றது. அதில் ஒரு கவுன்சிலர் திமுகவுக்கு மாறியதால் அதிமுக பலம் 4 ஆக குறைந்தது. இதேபோல் தொடர்ந்து அதிமுக கவுன்சிலர்கள் திமுகவுக்கு மாறி வருவதால், உள்ளாட்சிகளில் அதிமுக பலம் கரைந்து வருகிறது. இதைத் தடுக்க முடியாமல் நிர்வாகிகள் திணறி வருகின்றனர்.