

மதுரை தபால்தந்தி நகரைச் சேர்ந்தவர் கோபி ஷங்கர் (25). ஆய்வு மாணவரான இவர் மதுரை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட உள்ளார். இடையிலிங்க வாலிபரான இவர் மாற்று பாலினத்தவர் உரிமைகளுக்கான தென்னிந்திய துணைப் பிரதிநிதியாக இருந்தவர்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: திருநங்கை, மாற்றுபாலினத்தவர் (டிரான் ஜென்டர்) என்பது வேறு இடையிலிங்கத்தவர்கள் (இன்டர்செக்ஸ்) என்பது வேறு. பிறக்கும்போது வேறு பாலினத்தவராக இருந்து பருவ வயதில் வேறு பாலினமாக மாறுபவர்கள்தான் மாற்று பாலினத்தவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். பிறக்கும்போதே இருபால் உறுப்புகளுடன் பிறப்பவர்கள் இன்டர்செக்ஸ் என்று அழைக்கப்படுவார்கள். இதுகுறித்து அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல சில மருத்துவர்களுக்கே சரியான புரிதல் இல்லை.
ஆஸ்திரேலிய நாட்டில் இது பற்றிய புரிதல் இருந்ததால்தான், அங்கே கிரெஸி பிரௌன் என்ற இடையி லிங்கத்தவர் மேயராகியிருக்கிறார். அதுபோன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே நான் தேர்தலில் போட் டியிடுகிறேன். இந்தியாவிலேயே முதன்முறையாக தேர்தலில் போட்டியிடும் இடையிலிங்கத்தவர் நான்தான். நான் மூன்றாம் பாலினத்தவர் பட்டியலில் வர மாட்டேன் என்று கூறியதை ஏற்றுக்கொண்டு, ஆண் என்ற அடையாளத்துடன் தேர்தலில் போட்டியிட தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி அனுமதி தந்துள்ளார்.
ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளர் பச்சைத்தண்ணி மாணிக்கத்தின் அனைத்து மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மதுரை மாவட்டத்தில் 26 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் பலர் களமிறங்க உள்ளனர். அவர்களில் நானும் ஒருவர்.
காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக தங்கங்களைக் குவித்து, பின்னர் பாலின பரிசோதனை என்ற பெயரில் அனைத்து பதக்கங்களையும் பறிகொடுத்த புதுக்கோட்டை சாந்தி என் வெற்றிக்காக பிரச்சாரம் செய்ய மதுரை வரவுள்ளார் என்றார்.