Published : 15 Apr 2016 01:28 PM
Last Updated : 15 Apr 2016 01:28 PM

திருச்சி மாவட்டத்தில் 6 தொகுதிகளில் திமுக போட்டி: 4 தொகுதிகளில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு

திருச்சி மாவட்டத்தில் திமுக போட்டியிடும் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 4 தொகுதிகளில் புதுமுக வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 6 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மற்ற 3 தொகுதிகளான திருச்சி கிழக்கு, முசிறி ஆகிய தொகுதிகள் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கும், மணப்பாறை தொகுதி, கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள 6 தொகுதிகளில் திருச்சி மேற்கில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, லால்குடி தொகுதியில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் சவுந்தரபாண்டியன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இதுதவிர ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், மண்ணச்சநல்லூர், துறையூர் (தனி) ஆகிய தொகுதிகளில் புதுமுகங்கள் போட்டியிட திமுக தலைமை வாய்ப்பளித்துள்ளது.

திருச்சி மேற்கு

திருச்சி மேற்கு தொகுதியில் திமுக தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு போட்டியிடுகிறார். 63 வயதாகும் இவர், ஏற்கெனவே லால்குடி சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து 2 முறையும், திருச்சி மேற்கு (அப்போது திருச்சி-2) சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து ஒரு முறையும் வெற்றி பெற்றவர். 2006-11 திமுக அரசில் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர். 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர். இவருக்கு மனைவி சாந்தா, மகன் அருண், 2 மகள்கள் உள்ளனர்.

லால்குடி

லால்குடி சட்டப்பேரவை தொகுதி வேட்பாளராக அ.சவுந்தரபாண்டியன் அறிவிக்கப்பட்டுள்ளார். தற்போது இந்த தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர். 1964-ல் பிறந்த இவர், பிளஸ் 2 படித்தவர். 1990-ல் கட்சியில் இணைந்த இவர் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். தற்போது கட்சியில் புள்ளம்பாடி தெற்கு ஒன்றியச் செயலாளராக உள்ளார். மனைவி தமிழ்கொடி, குழந்தைகள் தமிழ்வேணி, அறிவரசன் உள்ளனர்.

ஸ்ரீரங்கம்

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளரான எம்.பழனியாண்டி(48), 1984-ல் திமுகவில் இணைந்தார். 3 முறை மணிகண்டம் ஒன்றிய திமுக செயலாளராக பொறுப்பு வகித்தவர். சோமரசம்பேட்டையில் தனது சகோதரர்களுடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார். 2 மகன்கள் உள்ளனர். முதல் முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

திருவெறும்பூர்

திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிக்கப்பட்டுள்ளார். திமுகவின் முன்னணி தலைவராக திகழ்ந்த, மறைந்த அன்பில் தர்மலிங்கத்தின் மகனான அன்பில் பொய்யாமொழியின் மகன் இவர். திமுக இளைஞரணி துணைச் செயலாளராக தற்போது பொறுப்பு வகித்து வருகிறார். முதல் முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

மண்ணச்சநல்லூர்

மண்ணச்சநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளரான எஸ்.கணேசன், தற்போது பெரமங்கலம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக பொறுப்பு வகிக்கிறார். 1961-ல் பிறந்த இவர், பட்டப்படிப்பு முடித்தவர். 1986-ல் திமுகவில் இணைந்த இவர் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். இவருக்கு மனைவி பெரியக்கா, ஒரு மகன் உள்ளனர். முதல் முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

துறையூர் (தனி)

துறையூர் (தனி) தொகுதி வேட்பாளர் எஸ்.ஸ்டாலின் குமார் (32), திமுகவின் அடிப்படை உறுப்பினர். பி.இ. பட்டதாரியான இவர் திருமணமாகாதவர். இவரது தந்தை செல்லதுரை திமுக வார்டு செயலாளர். தாயார் பூபதி செல்லதுரை 2001-06 வரை நகர்மன்ற உறுப்பினராகவும், 2006-11 வரை துறையூர் நகர்மன்றத் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர். முதல்முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் இவருக்கு ஒரு சகோதரர், ஒரு சகோதரி உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x