

ஆடுதுறை பேரூராட்சித் தலைவர் பதவி திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பேரூராட்சித் தலைவர் பதவியை கைப்பற்ற திமுக கூட்டணிக்கு ஒருவரின் ஆதரவும், பாமக கூட்டணிக்கு 4 பேரின் ஆதரவும் தேவைப்படுவதால், உறுப்பினர்கள் கடத்தப்படலாம் என்ற அச்சத்தால், 15 உறுப்பினர்களின் வீடுகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 இடங்களில் திமுக 4, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 2, மதிமுக 1 என திமுக கூட்டணி 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த கூட்டணியில் பேரூராட்சி தலைவர் பதவி மதிமுகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, வேட்பாளராக 3-வது வார்டு உறுப்பினர் ரா.சரவணன் அறிவிக்கப்பட்டுள்ளார் .
இவர், பேரூராட்சி தலைவராக வேண்டுமெனில் 8 பேரின் ஆதரவு தேவை. எனவே, இந்த பேரூராட்சியில் வென்ற மற்றொரு வேட்பாளரின் ஆதரவை பெற வேண்டியுள்ளது.
இதேபோல, பாமக 4, அதிமுக 2, சுயேச்சைகள் 2 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதில், பாமக சார்பில் வெற்றி பெற்றுள்ள வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் ம.க.ஸ்டாலினும் பேரூராட்சித் தலைவராக முயற்சி செய்து வருகிறார்.
இந்நிலையில் ஆடுதுறையில் பேரூராட்சி உறுப்பினர்கள் கடத்திச் சென்று, அவர்களை மிரட்டி ஆதரவு பெறும் முயற்சி நடைபெறலாம் என போலீஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, ஆடுதுறை பேரூராட்சியில் வென்ற 15 உறுப்பினர்களின் வீடுகளின் முன்பும், முக்கிய தெருக்களிலும் திருவிடைமருதூர் டிஎஸ்பி வெற்றிவேந்தன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் ராமமூர்த்தி, ஓம்பிரகாஷ் ஆகியோர் அடங்கிய 100-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று (மார்ச் 4) நடைபெறவுள்ள பேரூராட்சித் தலைவருக்கான தேர்தலில் மதிமுகவின் சரவணன், பாமகவின் ம.க.ஸ்டாலின் போட்டியிடும் பட்சத்தில் இருவரில் ஒருவர் தலைவராகலாம்.
அதேநேரத்தில் திமுகவில் கோ.சி.மணியின் மகன் இளங்கோவனுக்கு பேரூராட்சித் தலைவர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது பெயர் திமுக வெளியிட்ட பட்டியலில் இடம்பெறாததால், திமுகவினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.