"உயர் பிழைத்ததே போதும்" - உக்ரைனில் இருந்து ஊர் திரும்பிய குமரி மாணவி

மாணவி ஸ்ருதி
மாணவி ஸ்ருதி
Updated on
1 min read

உக்ரைனில் போர் பதற்றத்துக்கு மத்தியில் குமரி மாணவிகள் 3 பேர் நேற்று சொந்த ஊர் திரும்பினர்.

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரைவிளையைச் சேர்ந்த சதாசிவன் மகள் ஸ்ருதி (19), களியக்காவிளையைச் சேர்ந்த ஆஷிதா (19), கருங்கல்லைச் சேர்ந்த அஷிகா ஆகியோர், மருத்துவம் படிப்பதற்காக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உக்ரைன் சென்றனர். உக்ரைனின் மேற்குப் பகுதியில் உள்ள உஷோர்டு மருத்துவக் கல்லூரியில் இவர்கள் முதலாம் ஆண்டு படித்து வந்தனர். உக்ரைன் போர் தீவிரமடைந்திருந்தாலும் இவர்கள் வசிக்கும் உஷோர்டு பகுதியில் பெரும் பாதிப்பு இல்லை. அதேநேரம் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடைபெறலாம் என்ற அச்சத்தால் அங்குள்ள மாணவர்கள் உயிர் பயத்தில் இருந்தனர்.

தற்போது, மத்திய அரசின் நடவடிக்கையால் சொந்த ஊருக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மாணவி ஸ்ருதி கூறியதாவது: தற்போது நிலவும் போரினால், இந்தியாவைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மாணவ - மாணவிகள் உயிர் தப்பினால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டோம். நாம் மீண்டும் சொந்த ஊர் செல்வோமா என அனைவரும் அச்சமடைந்தோம். இந்நிலையில் எங்கள் கல்லூரியின் ஏற்பாட்டில் ஹங்கேரி செல்ல பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. எங்களுடன் 150-க்கும் மேற்பட்டோர் உக்ரைன் எல்லையில் 10 மணி நேரத்துக்கு மேல் காத்திருந்தோம். நமது அரசு ஏற்பாடு செய்திருந்த விமானம் மூலம் 28-ம் தேதி டெல்லி வந்தோம். என்னுடன் குமரி மாவட்டத்தை சேர்ந்த ஆஷிதா, அசிகா ஆகியோரும் வந்தனர்.

சென்னை வந்து பெற்றோரை சந்தித்தபோது, மீண்டும் சொந்த ஊருக்கு வந்ததை நினைத்து கண்ணீர்விட்டோம். உக்ரைனில் இருந்து உயிர்பிழைத்து வந்தது, மறுபிறவி எடுத்தது போன்று உள்ளது. இனி மருத்துவ படிப்பு ஆன்லைனிலா, அல்லது ரஷ்யா-உக்ரைன் போர் முடிந்த பின்னரா? என்பது தெரியவில்லை. உயர் பிழைத்ததே போதும். படித்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in