சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்க கோரிக்கை: தேனி மாவட்ட நிர்வாகிகள் தீர்மானத்தால் சலசலப்பு

இபிஎஸ்-ஒபிஎஸ்: கோப்புப் படம்
இபிஎஸ்-ஒபிஎஸ்: கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்க கோரி தீர்மானம் நிறைவேற்றி நேற்று பெரியகுளத்தில் நடந்தக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்திடம் வழங்கப்பட்டதால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல், நகர்ப்புற தேர்தல் என அடுத்தடுத்த தேர்தல்களில் அதிமுக தோல்வியை தழுவியது. இந்தநிலையில் அதிமுகவில் சசிகலா, தினகரனை மீண்டும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்தநிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அதிமுக சார்பில் நடைபெற்ற நகர்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாவட்ட செயலர் சையதுகான், முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் கூட்டதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் இந்த தீர்மானம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் வழங்கப்பட்டுள்ளது. இதனால், அதிமுக.,வில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி சேலம், எடப்பாடியில் உள்ள தனது வீட்டில் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செம்மலை உள்ளிட்டோர் பங்கேற்றதாக தெரிகிறது.

கோவையில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி கூறுகையில் ‘‘சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் அதிமுக பலத்த தோல்வியை தழுவியுள்ளது. இதனால் தொண்டர்கள், நிர்வாகிகள் பெரும் கவலை கொண்டுள்ளனர். அவர்களின் மனசோர்வை போக்க அதிமுகவில் சசிகலா மற்றும் தினகரனை இணைக்க வேண்டும். அவர்களது தலைமையில் கட்சி செயல்பட வேண்டும். அதிமுகவுக்கு ஒற்றை தலைமையே சரியானது. இரு தலைமைகள் இருப்பதால் இரு கோஷ்டிகள் போல செயல்படுகின்றனர்’’ எனக் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in