வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தில் 3 நாட்கள் மிக கனமழைக்கு வாய்ப்பு

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தில் 3 நாட்கள் மிக கனமழைக்கு வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்ததாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 3 நாட்களுக்கு பல மாவட்டங்களில் மிகக் கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதி மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இதுஅடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இலங்கை, தமிழக கடற் கரையை நோக்கி நகரக் கூடும்.

இதன் காரணமாக, 3-ம் தேதி நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும். தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

4-ம் தேதி கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிருஇடங்களில் கன முதல் அதி கனமழை பெய்யக் கூடும். தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல்மிகக் கனமழையும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்கனமழையும் பெய்யக் கூடும்.

5-ம் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், சென்னை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

3-ம் தேதி தமிழக கடலோரப் பகுதி, மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், 4-ம் தேதிமத்திய மேற்கு வங்கக் கடல்,அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகள்,வடதமிழக, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிபகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே மேற்கூறிய பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in