

மருத்துவப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தக் கூடாது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''நாடு முழுவதும் உள்ள கிராமப்புற மற்றும் நகர்புறத்தைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர விரும்புகிறார்கள். இவர்களுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தினால் கிராமப்புற மாணவர்களுக்கும், நகர்புற மாணவர்களுக்கும் இடையே தேர்ச்சி பெறுவதில் ஏற்றத்தாழ்வு ஏற்படும்.
பொது நுழைவுத் தேர்வு முறை நடைமுறைப்படுத்தப்பட்டால் மாநிலங்களில் உரிமை பறிக்கப்படும் சூழல் ஏற்படும். எனவே, அனைத்து தரப்பு மாணவர்களும் பயன்பெறும் வகையில் மருத்துவப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டாம்'' என வாசன் தெரிவித்துள்ளார்.