Published : 03 Mar 2022 05:57 AM
Last Updated : 03 Mar 2022 05:57 AM
சென்னை: மருத்துவக் கல்வி கற்க தடையாக இருக்கும் நீட் தேர்வை ரத்து செய்வதே உடனடி இலக்காக இருக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிளஸ் 2 தேர்வில் 97 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றும், நீட் தேர்வால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்து, அதிகக் கல்விகட்டணம் செலுத்த முடியாததால் வேறுவழியின்றி, தனது மருத்துவக்கனவை நனவாக்கிட உக்ரைன் நாட்டுக்கு சென்று படித்த கர்நாடக மாநிலத்து மாணவர் நவீனின் இழப்பு மிகுந்த வேதனை அளிக்கின்றது.
நீட் நுழைவுத் தேர்வால் மருத்துவக் கல்வி ஏழை, நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு எட்டாக் கனியாக ஆகிவிடும் ஆபத்தை போக்கவே, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. தமிழக கட்சிகளும் ஒருமுகமாக வலியுறுத்தி வருகின்றன. தற்போது கர்நாடகமுன்னாள் முதல்வர் குமாரசாமியும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார். இன்னும் சில மாநிலங்களிலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
தற்போது வந்துள்ள உக்ரைன் சூழல் நீட் தேர்வு ரத்துக்கு மேலும்வலுவான காரணத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களைப் பாதுகாப்பாக மீட்பதும், உள்நாட்டில் மருத்துவக் கல்வி கற்கத் தடையாக இருக்கும் ‘நீட் தேர்வை’ ரத்து செய்வதும் உடனடி இலக்காக அமைய வேண்டும்.அந்த இலக்கு வெகு தொலைவில் இல்லை. அனைவரும் இணைந்து போராடி வெல்வோம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
பிரதமருக்கு வேண்டுகோள்
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘‘உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்கள் மீது குற்றம் கூறுவதை நிறுத்திக்கொண்டு, அவர்களை விரைவாக மீட்பதில்மத்திய அரசு கவனம் செலுத்தவேண்டும். பிரதமர் மோடி, தமதுஅமைச்சரவையைச் சேர்ந்தவர்கள் உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்கள் பற்றி தேவையற்ற கருத்துகள் கூறுவதைத் தடுத்து, இந்தியர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT