

சென்னை: தமிழகத்தில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மே 5-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
வழக்கமாக 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்கும். நடப்பு கல்வியாண்டில் கரோனா பரவலால் பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டது. அதனால் மே மாதத்தில் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது.
இந்நிலையில், பொதுத் தேர்வுக்கான காலஅட்டவணையை பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் 10, மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் ஏப்ரல் 25-ல் தொடங்கி மே 2 வரை நடக்கும். அதைத் தொடர்ந்து, பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 5 முதல் 28-ம் தேதி வரை நடக்கும். சுமார் 8.36 லட்சம் மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்.
அதேபோல, பிளஸ் 1 பொதுத்தேர்வு மே 10 முதல் 31-ம் தேதி வரை நடைபெறும். இதில் 8.49 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 முதல் 30-ம் தேதி வரை பொதுத்தேர்வு நடக்கிறது. சுமார் 9 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர்.
பத்தாம் வகுப்புக்கு ஜூன் 17, பிளஸ் 2 வகுப்புக்கு ஜூன் 23, பிளஸ் 1-க்கு ஜூலை 7 ஆகிய தேதிகளில் தேர்வு முடிவுகள் வெளியாகும். விரிவான தேர்வுகால அட்டவணையை துறையின் http:// tnschool.gov.in என்ற இணைய தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
மாணவர்கள் அச்சமின்றியும், மகிழ்ச்சியாகவும் தேர்வுக்கு தயாராக வேண்டும். முதல்வர் தொடங்கி வைத்துள்ள ‘நான் முதல்வன்’ திட்டம், மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த திட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை அதிக கவனம் செலுத்தும். இதற்காக அனைத்து பள்ளிகளிலும் ஆலோசனை மையங்கள் அமைக் கப்படும்.
திருப்புதல் தேர்வுகளில் வினாத் தாள்கள் வெளியானதை முன்னிட்டு, பொதுத் தேர்வுகளில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் படி, 2 செட் வினாத்தாள்களை அச்சிடுகிறோம். தேர்வு நடக்கும் நாளில்தான் எந்த வினாத்தாளை வழங்க வேண்டும் என்பது முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.