தற்கொலை செய்து கொண்ட விவசாயி குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குக: அன்புமணி

தற்கொலை செய்து கொண்ட விவசாயி குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குக: அன்புமணி
Updated on
2 min read

கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்ட விவசாயி ராமசாமியின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவரும், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளருமான அன்புமணி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கோவை மாவட்டம் காரமடையை அடுத்த வேப்பம்பள்ளம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி என்ற விவசாயி கடன் சுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு பாமக சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வேப்பம்பள்ளம்புதூரில் 6 ஏக்கர் விவசாய நிலம் வைத்திருக்கும் ராமசாமி அதில் குடை மிளகாய் சாகுபடி செய்திருந்தார். அப்பகுதியில் நீர்வளம் போதிய அளவுக்கு இல்லாததால் குடை மிளகாய் பயிர்கள் மீது பசுமைக் குடில் அமைப்பதற்காக கார்ப்பரேஷன் வங்கியிலிருந்து ரூ.70 லட்சம் கடன் வாங்கியிருந்தார்.

ஆனால், துரதிருஷ்டவசமாக ராமசாமி நினைத்தது எதுவும் நடக்கவில்லை. பசுமைக் குடில் அமைப்பதற்காக வாங்கப்பட்ட கடனில் 50% மானியமாக கிடைக்கும் என எதிர்பார்த்தார். அது கிடைக்கவில்லை. குடைமிளகாய் நல்ல விலைக்கு விற்பனையானால் அதைக் கொண்டு கடனை அடைக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், குடை மிளகாய் விளைச்சல் அதிகரித்ததால் அதன் விலை 40 விழுக்காட்டுக்கும் அதிகமாக சரிந்து விட்டது.

இதனால் கடனை அடைக்க முடியாமல் தவித்த அவர், 6 மாதங்களுக்கு முன் தமது குடும்பத்தினருக்கு சொந்தமான நகைகளை ரூ.6.5 லட்சத்திற்கு அடகு வைத்து அந்த பணத்தை வங்கியில் செலுத்தினார். இத்தகைய நிலையில், மேலும் ரூ.9 லட்சத்தை உடனடியாக செலுத்த வேண்டும் என வங்கி மேலாளர் கூறியதால் கவலையடைந்த ராமசாமி, அதிலிருந்து மீள வழி தெரியாததால் வயலிலேயே விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்தில் நடந்த நான்காவது விவசாயி தற்கொலை இதுவாகும். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 2423 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். விவசாயிகள் தற்கொலைக்கான முதன்மைக் காரணம் கடன் தொல்லையாகவே இருக்கிறது. விவசாயிகளுக்கு கடன் சுமை ஏற்படுவதற்கான காரணம் குறித்து ஆராய்ந்தால், பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காதது, விளைபொருட்களுக்கு உரிய கொள்முதல் விலை கிடைக்காதது, இயற்கை சீற்றங்களால் பயிர்கள் பாதிக்கப்படுவது ஆகியவையே முதன்மையான காரணங்களாக உள்ளன. இவற்றை உடனடியாக களையாவிட்டால் விவசாயிகளின் தற்கொலையை நூறு ஆண்டுகள் ஆனாலும் தடுக்க முடியாது.

இந்த உண்மையை பாமக உணர்ந்திருக்கிறது. அதனால் தான் பாமகவின் தேர்தல் அறிக்கையில் பாசனத் திட்டங்கள், கொள்முதல் விலை உயர்வு, பயிர்க்கடன் தள்ளுபடி, உழவர் ஊதியக்குழு, அனைத்து இடுபொருட்களும் இலவசம் என்பன உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்திருக்கிறோம். இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் விவசாயிகள் தற்கொலைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று நம்புகிறோம். அந்த வகையில் விவசாயிகள் தற்கொலைகளுக்கு முடிவு கட்ட பாமகவால் மட்டும் தான் முடியும். இதை தமிழக விவசாயிகளும் உணர்ந்திருக்கின்றனர்.

கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்ட விவசாயி ராமசாமியின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அவரது வங்கிக் கடனை தள்ளுபடி செய்து, அவரது நில பத்திரங்களை உடனடியாக திருப்பித்தர மத்திய அரசும், வங்கி நிர்வாகமும் முன்வர வேண்டும்'' என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in