அரசுப் பணி நியமனங்களில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இடஒதுக்கீடு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசுப் பணி நியமனங்களில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இடஒதுக்கீடு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: கடந்த 2018, 2019, 2020-ம் ஆண்டுகளில் இரண்டாம் நிலை காவலர்கள், இரண்டாம் நிலை சிறை வார்டன் மற்றும் தீயணைப்புத் துறைவீரர்கள் தேர்வு தொடர்பாக சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டது.

இப்பணியிடங்களுக்கு மூன்றாம் பாலினத்தவர் விண்ணப்பிக்கும்போது தங்களை ஆண் என அடையாளப்படுத்தினால் ஆண்களுக்கான தேர்வு நடைமுறைகள் பின்பற்றப்படும் என்றும், பெண் என அடையாளப்படுத்தும்போது பெண்களுக்கான தேர்வு நடைமுறைகள் பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பை எதிர்த்தும், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வயது வரம்பு, எழுத்து தேர்வு, உடல்தகுதி தேர்வுகளிலும், கட்-ஆப் மதிப்பெண்களிலும் சலுகை வழங்கக்கோரி மூன்றாம் பாலினத்தவர்களான தேனி ஆராதனா, சாரதா உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் பிறப்பித்துள்ள உத்தரவில், " மூன்றாம் பாலினத்தவருக்கு தனியாக, குறி்ப்பிட்ட சதவீதம் வரை இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு எந்த தடையும் இல்லை. எனவே, மூன்றாம் பாலினத்தவர்களான மனுதாரர்கள் இப்பணியிடங்களுக்கான ஆரம்பகட்ட தேர்வு நடவடிக்கைகளில் தகுதி பெற்றதாகக் கருதி, உடல் தகுதித் தேர்வு உள்ளிட்ட பிற தேர்வுகளில் அவர்களுக்கு பெண்களுக்கான சலுகைகளை வழங்கி, 8 வாரங்களில் தேர்வு நடைமுறைகளை முடிக்க வேண்டும்" என்று சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், "எதிர்காலத்தில் அரசுப் பணி நியமனங்களில் சலுகைகள் மட்டுமின்றி, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு குறிப்பிட்ட சதவீதம் வரை தமிழக அரசு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும்" என்றும் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in