

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 17 பேரூராட்சிகளில் திசையன்விளை பேரூராட்சி மட்டும் அதிமுக வசம் சென்றுள்ளது. இங்குள்ள 18 வார்டுகளில் அதிமுக 9 இடங்களிலும், பாஜக ஓரிடத்திலும் வென்றன. திமுக 2, காங்கிரஸ் 2, தேமுதிக 1, சுயேச்சைகள் 3 இடங்களில் வென்றுள்ளன. அதிக இடங்களில் வென்றுள்ளதால் பேரூராட்சி தலைவர் பதவி அதிமுகவுக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது.
பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று கவுன்சிலர்கள் பதவிஏற்றனர். அதிமுக மற்றும் பாஜக கவுன்சிலர்கள் ஹெல்மெட் அணிந்தபடி வந்து பதவியேற்றனர். இவர்கள் 10 பேரைத் தவிர மற்ற கவுன்சிலர்கள் யாரும் நேற்று பதவியேற்கவில்லை.
“பதவியேற்றால் மண்டையை உடைத்துவிடுவோம் என மிரட்டல் வந்ததால், ஹெல்மெட் அணிந்து வந்து பதவியேற்றதாக” அதிமுக கவுன்சிலர்கள் கூறினர். இதனிடையே, 7, 11-வது வார்டுகளில் சுயேச்சையாக வென்ற கமலா நேரு, உதயா ஆகியோர் அமைச்சர் ராஜ கண்ணப்பனை சந்தித்து திமுகவில் இணைந்தனர்.