Published : 09 Apr 2016 02:10 PM
Last Updated : 09 Apr 2016 02:10 PM

திருமங்கலம் தொகுதியில் உள்ளூர் அதிமுகவினர் தொடர்ந்து புறக்கணிப்பு

மதுரை மாவட்டத்தின் புறநகர் தொகுதியாக திருமங்கலம் உள்ளது. 2001-ல் தொகுதி மறுசீரமைப்பின்போது சேடபட்டி தொகுதியில் இருந்த தே.கல்லுப்பட்டி, பேரையூர் உட்பட சில பகுதிகளும் இத்துடன் இணைக்கப்பட்டன. விவசாயத்தையே தொழிலாகக் கொண்டுள்ள இந்த தொகுதியில் விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கின்றனர்.

விமான நிலைய சாலையில் ரயில்வே மேம்பாலம், திருமங்கலத்தில் புதிய பஸ் நிலையம், சிவரக்கோட்டையில் தொழிற்பேட்டை அமைக்க நிலம் கையகப்படுத்துதல், பெரிய தொழிற்சாலைகள் இல்லாதது போன்றவை நீண்ட காலப் பிரச்சினைகளாக இருக்கின்றன. 1952 முதல் 2009 இடைத்தேர்தல் உட்பட இதுவரை 15 சட்டப் பேரவைத் தேர்தல்களை இத்தொகுதி சந்தித்துள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி 5 முறையும், தி.மு.க. 3 முறையும், அ.தி.மு.க. 4 முறையும், மதிமுக, பார்வர்டு பிளாக், சுயேச்சை வேட்பாளர்கள் தலா ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளனர்.

1977-ல் பி.டி.சரஸ்வதி, 1991-ம் ஆண்டு டி.கே.ராதாகிருஷ்ணன், 2001-ம் ஆண்டு கா.காளிமுத்து, 2011-ம் ஆண்டு ம.முத்துராமலிங்கம் என இதுவரை அ.தி.மு.க. சார்பில் 4 பேர் இந்த தொகுதியில் இருந்து உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 4 பேருமே உள்ளூர் வேட்பாளர்கள் கிடையாது. அ.தி.மு.க.வில் வெற்றி பெற்றவர்கள் அனைவருமே வெளியூர் வேட்பாளர்கள் தான்.

தற்போது நடைபெற உள்ள தேர்தலுக்கும் அதிமுக வேட்பா ளராக ஆர்.பி.உதயக்குமார் நிறுத்தப்பட்டுள்ளார். இவரும் வெளியூரைச் சேர்ந்தவர் தான். தொடர்ந்து உள்ளூர் வேட்பாளர்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:

கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட ம.முத்துராமலிங்கம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர் கிடையாது. இந்த தொகுதிக்கு குறிப்பிட்டு சொல்லும்படியாக எந்த பணியையும் செய்யவில்லை. இதனால் அவர் மீது தொகுதி முழுவதும் கடும் அதிருப்தி நிலவி வந்தது. உள்ளூரைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்தினால் மட்டுமே மக்களின் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும். எனவே இந்த தேர்தலிலாவது உள்ளூரைச் சேர்ந்த ஒருவர் நிறுத்தப்படுவார் என எதிர்பார்த்தோம். ஆனால் இந்த ஆண்டும் வெளியூரைச் சேர்ந்தவரே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதனால் உள்ளூரைச் சேர்ந்தவர்களை வாக்களிப்பதற்காக மட்டுமே கட்சியினர் பயன்படுத்தி வருகின்றனர். உள்ளூர் பிரதிநிதியை தேர்ந்தெடுக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை. உள்ளூர் நபர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டே வருகின்றனர் எனத் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x