

சென்னை: சென்னை மாநகராட்சி தேர்தலில் வெற்றிபெற்ற 200 பேரும் மாமன்ற உறுப்பினர்களாக நேற்று பதவியேற்றுக்கொண்டனர். விதவிதமாக பதவியேற்பு உறுதிமொழி கூறி மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றனர்.
சென்னை மாநகராட்சியில் மொத்தம் 200 வார்டுகள் உள்ளன. மாநகராட்சி தேர்தலில் 153 இடங்களை பிடித்து திமுக கைப்பாற்றியுள்ளது. வெற்றிபெற்றவர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி ரிப்பன் மாளிகையில் உள்ள மாமன்ற கூட்ட அரங்கில் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, அனைவருக்கும் மாமன்ற உறுப்பினர்களாக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தொடக்கம் முதலே சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லை. 92-வது வார்டு சுயேச்சை உறுப்பினர் திலகர் பதவியேற்கும்போது, கை (காங்கிரஸ்) என்னை கைவிட்டுவிட்டது. ஆனால் மக்கள் என்னை கைவிடவில்லை. அவர்களுக்கு எனது நன்றி கூறுகிறேன் என்றார்.
61-வது வார்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் பாத்திமா முசாபர், மதநல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் நிலைநாட்ட பாடுபடுவேன் எனக்கூறி பதவியேற்றுக் கொண்டார். 134-வது வார்டு பாஜக உறுப்பினர் உமா ஆனந்தன், தெய்வ அனுகூலத்தால் தான் வெற்றி பெற்றதாகவும், அவர் வணங்கும் தில்லை அம்பலத்தானுக்கு நன்றி தெரிவித்தும் பதவியேற்றுக்கொண்டார்.
137-வது வார்டு திமுக உறுப்பினர் தனசேகரன், இந்த வார்டில் தொடர்ந்து 3-வது முறையாத வெற்றிபெறச் செய்ததற்காக அந்த வார்டு மக்களுக்கு நன்றி தெரிவித்து, பதவியேற்றார். 123-வது வார்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் சரஸ்வதி மோகன் சோசலிசம் ஓங்குக எனக்கூறி பதவி ஏற்றார். 111-வது வார்டு திமுக உறுப்பினர் நந்தினி, மக்களுக்காக உழைப்பேன். எனது மாமனார் மீது ஆணை எனக்கூறி பதவி ஏற்றுக்கொண்டார்.
107-வது வார்டு விசிக உறுப்பினர் கிரண் ஷர்மிலியோ, புரட்சியாளர் அம்பேத்கர் வாழ்க, பெரியார் வாழ்க, முதல்வர் ஸ்டாலின் வாழ்க, எழுச்சித்தமிழர் திருமா வாழ்க, ஜெய் பீம் எனக்கூறி பதவியேற்றார். 73-வது வார்டு விசிக உறுப்பினர் அம்பேத்வளவனோ, அம்பேத்கர், காரல் மார்க்ஸ் உள்ளிட்டோர் பெயரை வரிசையாக கூறி, அவர்களை மனதில் கொண்டு பதவியேற்பதாக கூறினார். 98-வது வார்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் பிரியதர்ஷினி சிந்தனை சிற்பி சிங்காரவேலர் நாமம் வாழ்க எனக்கூறி பதவியேற்றார்.
193-வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கோவிந்தசாமி பதவியேற்பின்போது, 'பதவி வரும்போது பணிவு வர வேண்டும், துணியும் வர வேண்டும் தோழா' என எம்ஜிஆர் திரைப்பட பாடலை பாட, அதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தவுடன் நிறுத்தினார்.
42-வது வார்டு, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் ரேணுகா, வெல்க பொதுவுடைமை கொள்கை, வெல்க திராவிட மாடல், வாழ்க ஸ்டாலின், வாழ்க சுதந்திரப் போராட்ட வீரர் நல்லகண்ணு எனக்கூறி பதவி ஏற்றுக் கொண்டார்.
திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சி உறுப்பினர்கள் பெரும்பாலானோர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, மு.கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, இடத்துக்கு ஏற்ப மாவட்ட செயலர்களான பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரன் ஆகியோர் பெயர்களை வரிசையாக கூறி பதவியேற்றனர்.
இந்நிலையில் நாளை காலை 9.30 மணிக்கு மேயர் தேர்தலும், அன்று பிற்பகல் 2.20 மணிக்கு துணை மேயர் தேர்தலும் நடைபெற உள்ளது.