

சென்னை: சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கம் முக்கிய ரயில் போக்குவரத்து தடமாக இருக்கிறது.
போதிய ரயில் பாதை இல்லாததால், கூடுதல் மின்சார ரயில்கள் இயக்க முடியாத நிலை இருந்தது. இதற்கிடையே, ரூ.256 கோடியில் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே சுமார் 30 கிமீ தொலைவுக்கு 3-வது பாதை அமைக்கும் பணிகள் முழுவதும் முடிந்து, ரயில் சேவை நேற்று முன்தினம் தொடங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 3-வது புதிய பாதையில் முதல் முறையாக மின்சார ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இதனால், விரைவு ரயில்கள், மின்சார ரயில்கள் இயக்கத்தில் தாமதம் ஏற்படுவது குறையும்.
கூடுதல் ரயில்கள்
தாம்பரம்-செங்கல்பட்டு தடத்தில் தேவைக்கு ஏற்ப அலுவலக நேரங்களில் மின் ரயில்களை அதிகரித்து இயக்கப்படும். தாம்பரம் வரையில் இயக்கப்படும் மின் ரயில்களில் சுமார் 25 சதவீத ரயில்கள் செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்படும். இவ்வாறு ரயில்வே அதிகாரிகள் கூறினர்.