

உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த, புதுச்சேரி வீராம்பட்டினத்தைச் சேர்ந்த தெய்வ சிகாமணி மகள் ரோஜா சிவமணி, உக்ரைனில் இருந்து பாதுகாப்பாக புதுச்சேரிக்கு நேற்று முன்தினம் அழைத்து வரப்பட்டார்.
மாணவி ரோஜா சிவமணி தனது பெற்றோருடன் நேற்று முதல்வர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் சந்தித்தார். முதல்வரிடம் ஆசிர்வாதம் பெற்ற மாணவி, தான் பத்திரமாக நாடு திரும்ப நடவடிக்கை மேற்கொண்டதற்காக நன்றி தெரிவித்தார். மாணவியின் பெற்றோரும் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.
இந்தச் சந்திப்புக்கு பின்னர் மாணவி ரோஜா சிவமணி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘போர் காரணமாக உக்ரைன் மோசமாக உள்ளது. சாப்பாடு, தண்ணீர் கிடைக்கவில்லை. ரூ.3 ஆயிரம் வரைதான் பணம் எடுக்க முடிந்தது. பொருட்களின் விலையும் அதிகமாக இருந்தது. பெண்களுக்கு நாப்கின் கூட கிடைப்பதில்லை. சரியான கழிப்பறை வசதி இல்லாமல் மிகவும் அவதியடைந்தோம்.
தொடர் குண்டு சத்தம், துப்பாக்கிச் சூடு, ஜெட் சத்தம் கேட்கிறது. இரவு 7 மணி முதல் காலை 10 மணி வரை ஊரடங்கு. வெளியே யாரும் செல்ல கூடாது. பதுங்கு குழியில் தங்கியிருந்தோம். இது மறக்க முடியாத அனுபவம். பெற்றோரை பார்க்க முடியாது, என்ற பயம் வந்தது. மின்சாரம் மற்றும் இணையதள சேவை இல்லாததால், வீட்டுக்கு பேச முடியவில்லை.
இந்தியா வருவோம் என்று நம்பிக்கை இல்லை.விமான நிலையத்தில் பெற்றோரை பார்த்ததும் அழுகை வந்தது. நான் இந்தியாவில் இருப்பதை நம்ப முடியவில்லை. பெற்றோரை பார்த்தது மகிழ்ச்சியாக இருந் தாலும், உக்ரைனில் சிக்கியுள்ள அனைவரும் வந்தால்தான் நிம்மதியாக இருக்கும்.
என்னை இங்கு அழைத்து வர பிரதமர், உக்ரைன் நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், ஹங்கேரியில் இருந்த தூதரக அதிகாரிகள் அனை வரும் உதவி புரிந்தனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி. சென்னை விமான நிலையம் வந்து வரவேற்ற ஆளுநர் தமிழிசைக்கு நன்றி. டெல்லியில் இருந்து புதுச்சேரி அழைத்து வர உதவிய முதல்வர் ரங்கசாமிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று உருக்கமாக தெரிவித்தார்.
தொடர்ந்து மாணவி ரோஜா சிகாமணி புதுச்சேரி பாஜக கட்சி தலைமை அலுவலகத்துக்கு பெற்றோருடன் சென்றார். அங்கு மாநிலத் தலைவர் சாமிநாதன், மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். பாதுகாப்பாக புதுச்சேரி வருவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.