Published : 03 Mar 2022 05:00 AM
Last Updated : 03 Mar 2022 05:00 AM

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவி ஏற்பு: மறைமுக தேர்தல் நாளை நடைபெறுகிறது

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து, மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணைத்தலைவர், பேரூராட்சி தலைவர், துணைத்தலைவருக்கான மறைமுக தேர்தல் நாளை நடைபெறவுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் ஒருமாநகராட்சி, குடியாத்தம், பேரணாம்பட்டு என 2 நகராட்சிகள், பள்ளிகொண்டா, ஒடுக்கத்தூர், திருவலம், பென்னாத்தூர் ஆகிய 4 பேரூராட்சிகளில் வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் நேற்று காலை பதவி ஏற்றுக்கொண்டனர்.

வேலூர் மாநகராட்சியில் 60 வார்டுகளில் 44 வார்டுகளில் திமுக வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் மேயர் மற்றும் துணை மேயர் பதவியை கைப்பற்றியுள்ளது.

வெற்றி பெற்ற கவுன்சிலர் பதவி ஏற்பு விழா மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்றது. பதவியேற்பு விழாவுக்கு மாநகராட்சி கவுன்சிலர்கள் தங்களது குடும்பத்தார் மற்றும் உறவினர்களுடன் வந்திருந்தனர்.

1-வது வார்டு முதல் வரிசையாக கவுன்சிலர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டு, அவர்களுக்கு மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார் (அணைக் கட்டு), கார்த்திகேயன் (வேலூர்), திமுக அவைத் தலைவர் முகமது சகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திமுக கவுன்சிலர்கள் பதவி ஏற்கும்போது முத்தமிழ் அறிஞர் கலைஞர், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரில் பதவி ஏற்றுக்கொண்டனர். அதிமுக கவுன்சிலர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரில் ஆணையிடுவதாக கூறி பதவி ஏற்றுக்கொண்டனர்.

பதவி ஏற்பு விழா நடந்த கூட்ட அரங்கத்தில் இடப்பற்றாக்குறை ஏற்படும் என்பதால் மாநகராட்சி அலுவலகத்துக்கு வெளியே பந்தல் அமைக்கப்பட்டு 2 இடங்களில் பெரிய திரைகளில் பதவி ஏற்பு விழா நேரடியாக ஒளி பரப்பப்பட்டது.

பெண் கவுன்சிலர்கள் பதவி ஏற்கும்போது அவரவர் கணவர் மற்றும் குழந்தைகளுடன் சென்று பதவி ஏற்றுக் கொண்டனர். பதவி ஏற்றக்கொண்ட பிறகு, மாநகராட்சி கூட்ட அரங்கில் நின்று குடும்பத்தோடு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பதவி ஏற்றுக்கொண்ட கவுன்சிலர்களுக்கு அவர்களது நண்பர்கள், உறவினர்கள் பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தனர்.

அதேபோல, குடியாத்தம், பேரணாம்பட்டு நகராட்சி அலுவலகங்களில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களும், 4 பேரூராட்சிகளில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அந்தந்த நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் முன்னிலையில் பதவி ஏற்றுக் கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜா, சோளிங்கர், அரக்கோணம், மேல் விஷாரம் ஆகிய 6 நகராட்சி அலுவலகங்களிலும், பனப்பாக்கம், அம்மூர், திமிரி, கலவை, விளாப்பாக்கம், காவேரிப் பாக்கம், நெமிலி உள்ளிட்ட பேரூராட்சிகளில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் நேற்று காலை பதவி ஏற்றுக்கொண்டனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி ஆகிய 4 நகராட்சிகள், நாட்றாம் பள்ளி, உதயேந்திரம், ஆலங்காயம் ஆகிய 3 பேரூராட்சி அலுவலகங்களில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் முன்னிலையில் நேற்று காலை பதவி ஏற்றுக்கொண்டனர்.

கவுன்சிலர்கள் பதவி ஏற்றுள்ள நிலையில், மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணைத்தலைவர், பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் ஆகிய பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நாளை 4-ம் தேதி நடைபெறகிறது.

மேயர், தலைவர் பதவிகளுக்கு காலையிலும், துணை மேயர் மற்றும் துணைத்தலைவர் களுக்கான தேர்தல் பிற்பகலிலும் நடைபெற உள்ளது.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என அனைத்து இடங்களிலும் திமுகவே பெருபான்மை பலத்துடன் வெற்றி பெற்று இருப்பதால் கட்சித்தலைமை அறிவிக்கும் நபரே மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர் துணைத்தலைவர், பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் பதவியை ஏற்பார்கள் என தெரிகிறது. இதில், போட்டி ஏற்பட்டால் மட்டுமே வாக்குகெடுப்பு நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x