

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு-கண்ணமங்கலம் கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் ஏ.வி.சாரதி.அதிமுக வர்த்தக பிரிவு மாவட்டச் செயலாளராக பதவி வகித்து வந்த ஏ.வி.சாரதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுகவில் இணைந்தார். கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஏ.வி.சாரதி ஈடுபட்டு வந்தார்.
தொழிலதிபரும், கட்சி பிரமுகருமான ஏ.வி.சாரதி சிமென்ட் ஏஜென்சி, கல்குவாரி, உள்ளிட்ட பல்வேறு தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், மாசாபேட்டை லட்சுமிநகரில் உள்ள ஏ.வி.சாரதி வீட்டுக்கு சென்னையில் இருந்து 4 குழுக்களாக வருமான வரித்துறையினர் நேற்று காலை 7.30 மணியளவில் வந்தனர். அதேபோல, ஆற்காடு - கண்ணமங்கலம் கூட்ரோட்டில் உள்ள ஏ.வி. சாரதியின் வீடு மற்றும் அலுவலகம், வேப்பூர் பகுதியில் உள்ள கேளிக்கை விடுதி, திமிரி அடுத்த பாடி பகுதியில் உள்ள கல்குவாரி, சென்னை, காஞ்சிபுரம், பெரும்புதூர் உள்ளிட்ட பகுதியில் ஏ.வி.சாரதிக்கு சொந்தமான 28 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
10 பேர் கொண்ட குழுவினர் 3 பிரிவாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனை நடந்தபோது வீட்டுக்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. பல்வேறு ஆவணங் களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் மட்டுமே சோதனை நடந்து வந்த நிலையில், தற்போது திமுக பிரமுகர் வீட்டில் வருமான வரி சோதனை நடந்த இச்சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.