Published : 02 Mar 2022 10:25 PM
Last Updated : 02 Mar 2022 10:25 PM

'மாணவர்களை கேள்வி கேட்க பாஜகவுக்கு இதுவா நேரம்?' - மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டிப்பு

சென்னை: "உள்நாட்டில் மருத்துவக் கல்வி கற்கத் தடையாக இருக்கும் நீட் தேர்வை ரத்து செய்யும் நம் இலக்கு வெகு தொலைவில் இல்லை. நமது குரல் அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது" என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றுவரும் இந்தியர்களில் 90% பேர் இங்கு இந்திய அரசால் நடத்தப்படும் தகுதித் தேர்வில் (Foreign Medical Graduates Examination FMGE) வெற்றி பெறுவதில்லை என்று மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறியிருப்பது சர்ச்சையாகியுள்ளது. இதனை கண்டித்து பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, அமைச்சரை கண்டித்துள்ளதுடன், நீட் தேர்வினால் தான் மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக தனது டுவிட்டர் பதிவில், "உக்ரைன் போன்ற சிறிய நாடுகளுக்கு ஏன் மருத்துவக் கல்வி படிக்கப் போனார்கள்” என்று கேள்வி கேட்க பா.ஜ.க.வுக்கு இதுவா நேரம்? பரப்புரை செய்யவோ விளம்பரப்படுத்திக் கொள்வதற்கோ உகந்த நேரம் அல்ல. உயிருக்கும் - எதிர்காலத்திற்கும் போராடும் மாணவர்களைக் காப்பாற்றுங்கள். உள்நாட்டில் மருத்துவக் கல்வி கற்கத் தடையாக இருக்கும் நீட் தேர்வை ரத்து செய்யும் நம் இலக்கு வெகு தொலைவில் இல்லை. நமது குரல் அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. இது ஒட்டுமொத்தமான இந்தியாவின் குரலாக மாறும். அனைவரும் இணைந்து போராடி வெல்வோம்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், "நெருக்கடி மிகுந்த இந்நேரத்தில், உக்ரைனில் சிக்கியுள்ள நமது மாணவர்கள் தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலையில் தவிக்க விடப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் வேதனையளிக்கின்றன. போர்த் தாக்குதல்களையும் எல்லைப்பகுதிகளில் எதிர்ப்பையும் நமது மாணவர்கள் சந்தித்து வரும் வேளையில், ஒன்றிய அரசு அவர்களைக் குற்றங்கூறுவதை நிறுத்திக்கொண்டு, அவர்களை விரைவாக மீட்பதில் கவனம் செலுத்தவேண்டும்.

இந்தியக் கடவுச்சீட்டைப் பெற்றுள்ள இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரையும் பாதுகாக்க வேண்டியது இந்திய அரசின் பொறுப்பாகும். பிரதமர் அவர்கள், தமது அமைச்சரவையைச் சேர்ந்தவர்கள் தேவையற்ற கருத்துகளை வெளியிடுவதைத் தடுத்து; இந்தியர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்." என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x