தேர்தலில் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த ராஜேஷ் லக்கானி டெல்லியில் ஆலோசனை: துணை ராணுவப்படை எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு

தேர்தலில் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த ராஜேஷ் லக்கானி டெல்லியில் ஆலோசனை: துணை ராணுவப்படை எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு
Updated on
1 min read

தமிழக தேர்தலில் பணப் புழக்கத்தை கட்டுப்படுத்த, பறக்கும் படையில் கூடுதலாக துணை ராணுவப் படையினரை சேர்ப்பது, தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக டெல்லியில் நேற்று தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பங்கேற்றார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு மே 16-ம் தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக தேர்தல் துறை செய்து வருகிறது. சமீபத்தில் தமிழகம் வந்த தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி, தேர்தலை அமைதியான முறையில் நடத்துவது தொடர்பாக அரசியல் கட்சிகள், தேர்தல் துறை, காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, சட்டப்பேரவை தேர்தலின்போது வாக்காளர் களுக்கு பணம் கொடுக்கப்படு வதை தடுக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையரிடம் தெரிவித்தன.

இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி கூறும்போது, ‘‘தமிழக தேர்தலில் அதிக அளவில் பணம் கொடுக்கப்படுவது எங்களுக்கும் தெரியும். இதை தடுக்க, பறக்கும் படையின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். பயிற்சி ஐபிஎஸ் அதிகாரிகள், மத்திய அரசு அலுவலர் ஒருவர், துணை ராணுவப் படையினர் பறக்கும் படையில் சேர்க்கப்படுவர்’’ என்றார்.

திடீர் அழைப்பு

இந்நிலையில், தேர்தல் ஆணைய அழைப்பின் பேரில் நேற்று காலை திடீரென தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, தேர்தலுக்கான காவல்துறை கூடுதல் டிஜிபி ஆபாஷ்குமார் ஆகியோர் டெல்லி புறப்பட்டுச் சென்றனர். தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் நேற்று நடந்த கூட்டத்தில் இவர்கள் பங்கேற்றனர்.

இது தொடர்பாக தேர்தல் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘தமிழகத்துக்கு ஏற்கெனவே, 300 கம்பெனிகள் வரை துணை ராணுவப் படைகளை அனுப்ப தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது.

தற்போது பறக்கும் படையிலும் துணை ராணுவப் படையினர் சேர்க்கப் படுகின்றனர். இது தொடர்பாகவும், பதற்றமானவையாக கண்டறியப்பட்ட 9 ஆயிரத்து 630 வாக்குச் சாவடிகளில் செய்யப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்படுகிறது. எனவே, தேர்தலின்போது தற்போதுள்ள அளவை விட துணை ராணுவப் படை அதிகரிக்கும்’’ என்றனர்.

துணை ராணுவப்படை

துணை ராணுவப் படையை பொறுத்தவரை ஒரு கம்பெனியில் 71 வீரர்கள் இருப்பர். இதன்படி, தற்போதைய அளவில் 21 ஆயிரத்து 300 பேர் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளனர். பறக்கும்படை, கண்காணிப்பு குழு போன்றவற்றிலும் துணை ராணுவப் படையினர் ஈடுபடுத்தப்படுவதால் கூடுதலாக 20 கம்பெனிகள் வரை அனுப்பப்படலாம் என தேர்தல் துறை வட்டாரங்கள் தெரி வித்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in