

கரூர்: கரூர் மாநகராட்சி 22வது வார்டில் போட்டியின்றி தேர்வான திமுக பெண் மாமன்ற உறுப்பினர் பதவியேற்றபின்போது கண்களில் நீர் வடிய, குரல் கமற விசும்பலுடனும், மேலும், 48வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் ''கடவுளறிய'' எனக்கூறியும் பதவியேற்றனர்.
கரூர் மாநகராட்சி அலுவலக கூட்டரங்களில் மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி முன்னிலையில் 48 வார்டு மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு விழா இன்று (மார்ச் 2ம் தேதி) பதவியேற்பு விழா நடைபெற்றது. கரூர் மாநகராட்சி ஆணையர் என்.ரவிச்சந்திரன் மாமன்ற உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். வார்டு வரிசை வாரியாக மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். போட்டியின்றி தேர்வான 22வது வார்டு உறுப்பினர் பிரேமா பதவியேற்ற போது உணர்ச்சிவசப் பட்டத்தன் காரணமாக குரல் கம்ம, விசும்பலுடன் பதவியேற்றுக் கொண்டார்.
பதவிப் பிரமாணம் செய்து வைத்த மாநகராட்சி ஆணையர் என்.ரவிச்சந்திரன் ''உளமாற உறுதி கூறுகிறேன்'' எனக்கூற 47 வார்டு மாமன்ற உறுப்பினர்கள் அவ்வாறே பதவியேற்க 48வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரா.வேலுசாமி பதவியேற்பின் போது ஆணையர் என்.ரவிச்சந்திரன் ''உளமாற உறுதி கூறுகிறேன்'' என வாசிக்க வேலுசாமி ''கடவுளறிய உறுதி கூறுகிறேன்'' என்றார்.
அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் 11வது வார்டு சி.தினேஷ்குமார், 14வது வார்டு பி.சுரேஷ் ஆகியோர் அதிமுக வண்ணத் துண்டு அணிந்தும், காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர்கள் 9வது வார்டு ரா.ஸ்டீபன்பாபு, 12வது வார்டு மஞ்சுளா ஆகிய இருவரும் காங்கிரஸ் வண்ணத் துண்டு அணிந்தும், 41வது வார்டு மா.கம்யூனிஸ்ட் மாமன்ற உறுப்பினர் தண்டபாணி சிவப்பு வண்ணத் துண்டு அணிந்தும் பதவியேற்றனர். திமுகவைச் சேர்ந்த பா.பூசபதி 16வது வார்டில் சுயேச்சையாக வெற்றிப்பெற்ற நிலையில் திமுக கரைப்போட்ட வேட்டி, துண்டு அணிந்து வந்து பதவியேற்றார்.
திமுக மாமன்ற உறுப்பினர்கள் சிலர் திமுகவின் இருவண்ண துண்டு அணிந்தும், கரைவேட்டி அணிந்தும், சிலர் துண்டு அணியாமலும், பேண்ட் அணிந்து வந்தும் பதவியேற்றனர். திமுக, காங்கிரஸ், மா.கம்யூனிஸ்ட் மாமன்ற உறுப்பினர்கள் பலர் அமைச்சருக்கு சால்வை வழங்கியும், வணக்கம் தெரிவித்தும் பதவியேற்றுக்கொண்டனர். மாநகராட்சி பொறியாளர் நக்கீரன், மாநகர சுகாதார அலுவலர் லட்சியவர்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கரூர் பேருந்து நிலைய ரவுண்டானாவில் உள்ள அண்ணா சிலைக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி புதிய மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் சென்று மாலை அணிவித்தார்.