Published : 02 Mar 2022 07:55 AM
Last Updated : 02 Mar 2022 07:55 AM
சென்னை: தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வென்ற வார்டு உறுப்பினர்கள் இன்று (மார்ச் 2) காலை பதவியேற்கின்றனர்.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான 12,838 வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் பிப். 19-ம் தேதி நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதற்கான வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் கடம்பூர் பேரூராட்சிக்கான தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. மேலும், மாநகராட்சிகளில் 4 உறுப்பினர்கள், நகராட்சிகளில் 18 உறுப்பினர்கள், பேரூராட்சிகளில் 196 உறுப்பினர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர்.
மற்ற பதவிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டு, பிப். 22-ல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், 21 மாநகராட்சிகள், 132நகராட்சிகள், 435 பேரூராட்சிகளை திமுக கூட்டணி கைப்பற்றியது.
இந்நிலையில், வெற்றி பெற்றவர்கள் இன்று காலை பதவி ஏற்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியின் மன்றக் கூட்ட அரங்கு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆணையர் ககன்தீப்சிங்பேடி, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு, பணிகளைத் தீவிரப்படுத்தினர்.
இதேபோல, அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் பணிகள் தீவிரப்படுத் தப்பட்டுள்ளன.
இன்று காலை 9 மணிக்கு மாநகராட்சி, நகராட்சி உறுப்பினர்களுக்கு, அந்தந்த அமைப்புகளின் ஆணையர்களும், பேரூராட்சியில் செயல்அலுவலர்களும் பதவிப் பிரமாணம் செய்து வைக்கின்றனர். ஒவ்வொரு வார்டு உறுப்பினரும் தனித்தனியாக பதவிப் பிரமாண உறுதிமொழி ஏற்கின்றனர்.
சென்னை மாநகராட்சியில் 200 வார்டு உறுப்பினர்களும் இன்று காலை 9.30 மணிக்குப் பதவி ஏற்கின்றனர். ஆணையர்ககன்தீப்சிங்பேடி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். 200 வார்டுகளில் 102 வார்டுகளுக்கான பெண் உறுப்பினர்கள் இன்று பதவியேற்கின்றனர். இவர்களில் ஒருவர்தான் மேயராக பதவியேற்க உள்ளார்.
வரும் 4-ம் தேதி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சிகளின் தலைவர், துணைத் தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது. அன்று காலைமேயர், நகராட்சி, பேரூராட்சிகளின் தலைவர் தேர்தலும், பிற்பகலில் துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி துணைத்தலைவர்களுக்கான தேர்தலும்நடைபெற்று, அன்றே அனைவரும் பொறுப்பேற்கின்றனர்.
முன்னதாக, உறுப்பினர்கள் பதவியேற்பு விழாவுக்காக, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் முதல் கூட்டம் இன்று நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
வரும் 4-ம் தேதி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சிகளின் தலைவர், துணைத் தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT