Published : 02 Mar 2022 08:20 AM
Last Updated : 02 Mar 2022 08:20 AM

இசை நிகழ்ச்சிகளுடன் களைகட்டிய ஈஷா மஹா சிவராத்திரி விழா: மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா பங்கேற்பு

கோவை ஈஷா யோகா மையத்தில் நேற்று நடைபெற்ற மஹா சிவராத்திரி விழாவில் பேசிய சத்குரு. படங்கள்: ஜெ.மனோகரன்

கோவை: கோவையில் ஈஷா வளாகத்தில் நேற்றிரவு நடந்த மஹா சிவராத்திரி விழாவில், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கலந்து கொண்டார்.

கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் மஹா சிவராத்திரி விழா நேற்று மாலை, லிங்க பைரவி தேவி ஊர்வலத்துடன் தொடங்கியது. தியானலிங்கத்தில் பஞ்சபூத க்ரியா நிகழ்ச்சி நிறைவு பெற்ற பின்னர், விழா மேடையில் லிங்க பைரவி தேவிக்கு மஹா ஆரத்தி நடைபெற்றது. தொடர்ந்து, மஹா யோக வேள்வியை சத்குரு ஏற்றிவைத்தார்.

விழாவில் சத்குரு பேசும்போது, “ஓராண்டில் 13 சிவராத்திரிகள் உள்ளன. அதில் இந்த சிவராத்திரி மிகவும் மகத்தானது. உலகத்தில் பலவிதமான பிரச்சினைகள் உள்ளன. தற்போது போர் நடைபெற்று வருகிறது. சுற்றுச்சூழல் பிரச்சினைகள் உள்ளன. கரோனா காலத்தில் நமக்கு பிரியமானவர்களை இழந்துள்ளோம். மனிதன் கஷ்டத்திலிருந்து மீண்டு திரும்பி வாழும் தன்மை கொண்டவன். அதிலும், தமிழ் மக்கள் தெம்புள்ளவர்கள். நம்மிடம் இருப்பதில் மிகவும் முக்கியமானது, மதிப்பானது உயிர். அதை தெம்பாகவும், ஆனந்தமாகவும் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஆனந்தமயமான வாழ்க்கையை உருவாக்க வேண்டுமெனில் நாம் ஆனந்தமாக இருக்க வேண்டும்”என்றார்.

விழாவில் திரைப்பட பின்னணி பாடகர் ஷான் ரோல்டன், தெலுங்கு பாடகி மங்கலி, பக்திப் பாடகர் மாஸ்டர் சலீம், அசாமின் புகழ்பெற்ற பாடகர் பப்பான், ஹிமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த பாடகர் ஹன்ஸ்ராஜ் ரகுவன்ஷி ஆகியோர் பாடினர்.

இதுதவிர, ஈஷாவின் சொந்த இசை குழுவான சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவும், ஈஷா சம்ஸ்கிருதி குழுவினரும் தங்கள் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளை அர்ப்பணித்தனர்.

நேரடி ஒளிபரப்பு

ஈஷா மஹா சிவராத்திரி விழா தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மராத்தி உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளின் முன்னணி தொலைக்காட்சிகள் மற்றும் யூ- டியூப் சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

பிரபலங்கள் பங்கேற்பு

இந்த நிகழ்ச்சியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய இணை அமைச்சர்கள் தர்ஷனா ஜர்தோஷ், ராஜ்குமார் ரஞ்சன் சிங், ஜி.கிஷன் ரெட்டி, நடிகை கங்கனா ரணாவத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x