Published : 02 Mar 2022 08:52 AM
Last Updated : 02 Mar 2022 08:52 AM
சென்னை: தமிழகத்தில் உள்ள 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள், காலை 9 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மதியம் 2.30 மணி முதல் 5 மணிவரையும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையி்ல் பொதுமக்கள் நலன் கருதி இந்த நேர நிர்ண
யத்தில் சில மாற்றங்களை தமிழக உணவுத்துறை மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர், துணை ஆணையர்கள் மற்றும் அனைத்து மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 2018 மக்கள் சாசனத்தில் திருத்தங்களின்படி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், காலை 8.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 7 மணி வரையிலும் இதர பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் செயல்பட வேண்டும்.
ஆனால், இந்த வேலை நேரம் பெரும்பாலான ரேஷன் கடைகளில் பின்பற்றப்படுவதில்லை. இதனால் மாதாந்திர ஆய்வுக் கூட்டத்தில் குறித்த நேரத்தில் கடைகளை திறக்க உரிய அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும், அனைத்து நியாய விலைக் கடைகளிலும், வேலை நேரம் குறித்த விவரத்தை குடும்ப அட்டைதாரர்கள் அறியும் வகையில் தகவல் பலகையில் காட்சிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் இதுதொடர்பாக மாவட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் துணை ஆணையாளர்கள் ஆகியோர் ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதுகுறித்து நியாய விலைக்கடை பணியாளர்களிடம் கேட்ட போது, ‘‘தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த வேலை நேரம் முன்பு கடைபிடிக்கப்பட்டு வந்தது. பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாகவும், ஒரு சிலர் 3, 4 கடைகள் வரை கவனிக்க வேண்டியிருப்பதாலும் இந்த நேரத்தை பின்பற்ற இயலவில்லை. தற்போது மீண்டும் பழைய நேரத்தை பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT