

வேலூர் மாவட்டத்தில் திமுக வேட்பாளர்களுக்கு எதிராக தொடரும் போராட்டத்தால் எதிர்ப்பாளர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் முன்னணி நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 தொகுதிகளில் திமுகவினர் 10 தொகுதிகளில் போட்டி யிடுகின்றனர். வாணியம்பாடி, ஆம்பூர் மற்றும் சோளிங்கர் தொகுதிகளில் கூட்டணிக் கட்சியினர் போட்டியிடுகின்றனர். இதன் மூலம் 10 தொகுதிகளில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது.
அதிமுக வேட்பாளர் பட்டியலில் திருப்பத்தூர், வாணியம்பாடி, குடியாத்தம் (தனி), கே.வி.குப்பம் (தனி), வேலூர், காட்பாடி, ஆற்காடு, சோளிங்கர் தொகுதி வேட்பாளர்கள் மீது கட்சித் தலைமைக்கு அடுக்கடுக்கான புகார்களை அக்கட்சியினர் அனுப்பினர்.
மேலும், குடியாத்தம் மற்றும் கே.வி.குப்பம் தொகுதி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் நிர்வாகிகள் சிலர் நேரடியாகவே எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை அமைச்சர் கே.சி.வீரமணி சமாதானம் செய்தார்.
இதற்கிடையில், திமுக அறிவித்த 10 வேட்பாளர்களில் அரக்கோணம், கே.வி.குப்பம், குடியாத்தம், ஜோலார்பேட்டை தொகுதி வேட்பாளர்களுக்கு அக்கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித் துள்ளனர். ஒருபடி மேலே போய், அணைக்கட்டு வேட் பாளர் ஏ.பி.நந்தகுமாரை மாற்றக்கோரி அணைக்கட்டு ஒன்றியச் செயலாளர் பாபுவின் ஆதரவாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், மத்திய மாவட்ட அலுவலகத்தில் நடந்த கைகலப்பு சம்பவத்தில் வேட்பாளர் நந்தகுமாரை பாபுவின் ஆதர வாளர்கள் தாக்கினர். தொடர்ந்து, ஜோலார்பேட்டை வேட்பாளரை மாற்றக்கோரி மேற்கு மாவட்ட அலுவலகத்தை திமுகவினர் முற்றுகையிட்டனர்.
இந்நிலையில், ஆம்பூர் தொகுதியை மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கியதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அக்கட்சி நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நேதாஜி சாலையில் நேற்று திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், பேருந்து நிலையம் வழியாக ஊர்வலமாகச் சென்றவர்கள், நகர திமுக அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். அவர்களை நகரச் செயலாளர் எம்.ஆர்.ஆறுமுகம் சமாதானம் செய்தனர்.
அதேபோல, அரக்கோணம் வேட்பாளர் பவானியை மாற்றக்கோரி அக்கட்சியினர் புதிய பேருந்து நிலையம் அருகில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், திமுக நகர நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டம் நடந்த சிறிது நேரத்தில் பவானி வடிவேல் மாற்றப்பட்டு கிழக்கு மாவட்ட துணைச் செயலாளராக உள்ள ராஜ்குமார் புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இதுகுறித்து, திமுக நிர்வாகிகள் கூறும்போது, ‘‘தேர்தல் நேரத்தில் பிரச்சினை ஏற்படுவது சாதாரணமானது. ஆனால், இந்த தேர்தலில் வாய்ப்பு கிடைக்காதவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதையும் மத்திய மாவட்ட அலுவலகத்தில் நடந்த சம்பவத்தையும் கட்சித் தலைமை ஏற்கவில்லை. தலைமையின் உத்தரவுப்படி, எதிர்ப்பாளர்களை சமாதானப்படுத்தி தேர்தல் பணியில் ஈடுபட வைத்துள்ளோம். ஓரிரு நாளில் நிலைமை சரியாகிவிடும்’’ என்றனர்.