Published : 02 Mar 2022 08:01 AM
Last Updated : 02 Mar 2022 08:01 AM
சென்னை: கரோனா பாதிப்பு குறைந்ததால், மெட்ரோ ரயில்களில் கூட்டம் அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் 31.86 லட்சம் பேர் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
கரோனா பாதிப்பு குறைந்து வருவதால், மக்கள் அதிக அளவில் பயணம் செய்யத் தொடங்கிஉள்ளனர். எனவே, தேவைக்கு ஏற்றாற்போல மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. காலை, மாலை நேரங்களில் கூட்டம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, மெட்ரோ ரயில்களில் ஏசி வசதியுடன், விரைவாக பயணிக்கும் வசதி இருப்பதால் மக்கள் அதிக அளவில் பயணம் செய்து வருகின்றனர். இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த ஜனவரி மாதம் 25 லட்சத்து 19 ஆயிரத்து 252 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
அதேபோல, பிப்ரவரி மாதம் 31 லட்சத்து 86 ஆயிரத்து 653 பேர் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக கடந்த பிப். 28-ம் தேதி ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 252 பேர் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். க்யூஆர் கோடு குறியீட்டு முறையைப் பயன்படுத்தி 79,179 பேரும், பயணச் சீட்டு வாங்கி 18 லட்சத்து 48 ஆயிரத்து 222 பேரும் பயணம் செய்துள்ளனர்.
மெட்ரோ ரயில் நிறுவனம் க்யூஆர் குறியீடு பயணச் சீட்டில் கடந்த 2020 செப்டம்பர் முதல் 20 சதவீத கட்டணத் தள்ளுபடி வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT